தற்போதைய செய்திகள்

மக்களுக்கு உதவுவதில் கழகத்தினருக்கு ஈடு இணை வேறு யாரும் கிடையாது – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேச்சு

காஞ்சிபுரம்

மக்களுக்கு உதவுவதில் கழகத்தினருக்கு ஈடுஇணை வேறு யாரும் கிடையாது என்று அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழகம் சார்பில் காரப்பாக்கத்தில் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர் லியோ என்.சுந்தரம் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

மக்களுக்கு சேவையாற்றுவதில் அனைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஈடு இணையாக எவரும் வர இயலாது. அதனால் தான் இதயதெய்வம் அம்மா அவர்கள் “எனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரியும்” என்றார்கள்.

இதயதெய்வம் அம்மா அவர்களின் திட்டங்களை உலகமே பாராட்டுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்கினால் போதாது என்று கருதி அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 20 கிலோ விலையில்லா அரிசியை நியாயவிலை கடைகளில் வழங்கி புதிய புரட்சியை அம்மா அவர்கள் ஏற்படுத்தினார்.

தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி, விலையில்லா மிக்சி, கிரைண்டர் என மகளிருக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில், புத்தகப் பை, சீருடைகள், காலணிகள் ஆகியவற்றை வழங்கியதோடு நில்லாமல் மிதிவண்டியும் வழங்கினார்.

கழக அரசின் திட்டங்கள் ஏழை எளியவர்களை சென்றடைந்துள்ளன. இனிமேலும் தமிழக மக்கள் தி.மு.க.வின் போலியான வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள். மக்கள் தெளிவாக உள்ளார்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களை கூறலாம்.

இதயதெய்வம் அம்மாவின் அரசை வழிநடத்தும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கரங்களுக்கு வலுசேர்ப்போம். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 3-வது முறையாக கழக அரசு வெற்றி பெற்றிட அம்மாவின் 72வது பிறந்தநாளான இந்நாளில் உறுதிகொள்வோம். வென்று முடிப்போம்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.