தற்போதைய செய்திகள்

மதுரை புதூர் அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதியின்றி பூரி, வடை, ஆம்லெட் விற்பனை

மதுரை,

விடியா தி.மு.க. அரசு அமைந்தவுடன் ஏழை, எளியோரின் பசியை போக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான அம்மா உணவகத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்மா உணவகம் தொடர்ந்து ெசயல்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்நிலையில் மதுரை உள்ள 12 அம்மா உணவகங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்த பெண் பணியாளர்களை நீக்கி விட்டு தி.மு.க. ஆதரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்தி தி.மு.க. கவுன்சிலர்கள் அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அந்தோணியம்மாளின் வார்டில் உள்ள புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய இட்லி மற்றும் 5 ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லெட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகள் விற்கப்படுகிறது. இதேபோல் மதியம் அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு ரசம், மோர், ஆம்லெட் விற்பனை செய்கின்றனர்.

அம்மா உணவக ஊழியர்களை தி.மு.க. கவுன்சிலர் தனக்கு பிடித்தவாறு உணவுகளை விற்பனை செய்ய வைத்து நாள்தோறும் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்காக ரேசன் அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு, உளுந்து, ரவை போன்றவை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஏழை, எளியோரின் பசி போக்க தொடங்கப்பட்ட அம்மா உணவகத்திலும் திமுக கவுன்சிலர்கள் காசு பார்ப்பது அனைத்து தரப்பினரையும் வேதனைபட வைத்துள்ளது.