தற்போதைய செய்திகள்

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கைகள் தேவை

அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

கன்னியாகுமரி

இனியும் காலம் தாழ்த்தாமல் மக்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தடிக்காரன்கோணம் சந்திப்பு- வாழையத்துவயல் (பாலமோர் சாலை) வரை சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கடின தளம் அமைக்க அரசு ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தடிக்காரன்கோணம் முதல் கீரிப்பாறை காளிகேசம் வரை செல்லும் சாலை ஒகி புயல் காரணமாக பெய்த கன மழையால் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து பால்குளம் முதல் காளிகேசம் வரை கழக ஆட்சிகாலத்தில் சாலை சீரமைக்கப்பட்டது.

தடிக்காரன்கோணம் முதல் பால்குளம் வரை சாலை மிகவும் பாதிக்கப்பட்டு தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதில் நீர் தேங்கியிருப்பதால் பள்ளம் எதுவென்று தெரியாமல் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இச்சாலையை சீரமைப்பதில் இரு ஒப்பந்ததாரர்களிடையே டெண்டர் தொடர்பான பிரச்சினை வந்து தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு இருந்து வருகிறது.

மக்கள் நலன் கருதி இவ்வழக்கினை துரிதப்படுத்தி நிரந்தர தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கையினை அரசு மேற்கொண்டு இப்பகுதிகளில் சாலை பணிகளை விரைவில் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விடியல் அரசு என்று சொல்லி கொள்ளும் விடியாத அரசு இப்பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களை உணர்ந்து சாலை பணிகளை விரைவில் துவங்கும் நடவடிக்கையினை இனியும் காலம் தாழ்த்தாமல் மேற்கொண்டு, மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.