ஓராண்டு ஆட்சியில் தி.மு.க. மக்களுக்கு செய்தது என்ன? டாக்டர் விபிபி.பரமசிவம் கேள்வி

கோவை
ஓராண்டு ஆட்சியில் தி.மு.க. மக்களுக்கு செய்தது தான் என்ன? என்று கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை மண்டலத்திற்குட்பட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று முன்தினம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசியதாவது:-
தி.மு.க.வுக்கு எதிராக கழகம் தோற்றுவிட்டது, சோடை போய் விட்டது என்ற கூறிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்து வருகிறது தகவல் தொழில்நுட்ப பிரிவு. தி.மு.க.வின் உண்மை முகத்தை தோலுரித்து செயலாற்றுகிறது தகவல் தொழில்நுட்ப பிரிவு.
நீங்கள் சொல்லும் விஷயம் தான் மக்களிடம் உடனே சென்று சேர்கிறது. அரசியல் என்பது கலை. அதை மக்களுக்காக பயன்படுத்துங்கள். கழகத்திற்காக உங்களது உழைப்பை முதலீடு செய்யுங்கள் உயர்வை கழகம் தரும்.
அரசியல் மற்றும் சமூக வலைத்தளத்தை பிரிக்க முடியாது. இன்றைய இளைஞர்கள் பலர் அரசியல் பார்வையாளர்களாக மாறி உள்ளனர். இது முக்கியமான காலகட்டம். தி.மு.க.வின் தவறுகளை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்லுங்கள். உண்மையை எடுத்துரையுங்கள். தி.மு.க. போல ரூ.200-க்கு நோட்டீஸ் ஒட்டும் உ.பி.க்கள் அல்ல. தலைமை ஏற்கக்கூடிய தலைவர்களை உருவாக்கக்கூடிய இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
ஓராண்டு ஆட்சியில் தி.மு.க. என்ன மக்களுக்கு செய்தது? எத்தனையோ வரலாற்று திட்டங்களை நிறைவேற்றிய கழகம் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டது என்பதற்காக ஆட்சியை இழக்க வேண்டியதாகி விட்டது. தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில் சொத்துவரி பல மடங்கு உயர்வு. இதுபோல பலவற்றை கூறலாம். நாடகம் நடத்தி வருகிறது தி.மு.க.. மக்களிடையே பாகுபாடுகளை உருவாக்கி ஆட்சியை தி.மு.க. நடத்துகிறது. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, பெண்களுக்கு ஊக்கத்தொகை 1000, சிலிண்டர் மானியம் 100 போன்ற பொய்யான அறிவிப்பை வெளியிட்டதுமில்லாமல், லேப்டாப், தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி மானியம் உள்ளிட்ட அற்புதமான திட்டங்களை ரத்து செய்து மிக கேவலமான முறையில் ஆட்சி செய்கிறார் ஸ்டாலின்.
மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பதை மக்கள் நினைக்ககூடாது என்பதற்காக மதத்தையும் , ஜாதியையும் வைத்து அரசியல் செய்கிறது தி.மு.க.. ஆகவே இந்த ஆட்சியின் அவலங்களை யோசிக்க முடியாத அளவிற்கு பொய்களை ஊடகங்களின் மூலம் தி.மு.க. பரப்பி நாடகம் நடத்தி வருகிறது.
கழகத்தில் தொண்டர்களாக இருப்பதற்கு பெருமை கொள்வோம். கழகத்தில் தி.மு.க.வில் அது என்ன திராவிட மாடல் என்று சொல்லவே மாட்டார்கள். திராவிட இயக்க ஆட்சி என்றாலே அது கழக ஆட்சிதான். கனிமொழியிடம் மதுக்கடையை மூடவேண்டும் என்று கேட்டதற்கு தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொல்லவில்லையே என்று தப்பிக்கிறார். யாரை ஏமாற்ற நாடகம் நடத்தி வருகிறீர்கள்? தி.மு.க. என்பது ஒரு நாடக கம்பெனி தான். கல்லா கட்டும் பணியை திறம்பட செய்து வருகிறார்கள். எழுத்து, சிந்தனை, ஆற்றலை வெளிப்படுத்தி திமுகவிற்கு சாவுமணி அடிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் செயலாற்ற வேண்டும்.
2026-ல் மீண்டும் கழகம் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும், மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும். மக்களின் துயரங்கள் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.