தற்போதைய செய்திகள்

பெண்களின் முன்னேற்றத்திற்கு கழக ஆட்சியில் சிறப்பு திட்டங்கள் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பெருமிதம்

திருச்சி

தமிழகத்தில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் கழக ஆட்சி காலத்தில்தான் கொண்டு வரப்பட்டன என மாநகர் மாவட்டக் கழகச்செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 155 பயனாளிகளுக்கு ரூ.7.90 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், கழக அமைப்பு செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இவ்விழாவில் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தி வருகிறார். சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு குறிப்பாக மகளிருக்கு விலையில்லா தையல் இயந்திரம், பொருளாதார மேம்பாட்டு கடனுதவிகள், வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் சிறுபான்மையினர் மகளிருக்கு பொருளாதார கடனாக 69 மகளிருக்கு ரூ.3.90 லட்சத்திற்கான காசோலையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மகளிருக்கான விலையில்லா தையல் இயந்திரம் தலா ரூ.4,379 மதிப்பீட்டில் 37 பயனாளிகளுக்கு ரூபாய் 1,62,023 மதிப்பில் வழங்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விலையில்லா சலவைப் பெட்டி தலா ரூபாய் 4,870 மதிப்பீட்டில் 50 பயனாளிகளுக்கு ரூ.2,43,500 மதிப்பில் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 155 பயனாளிகளுக்கு ரூ.7,90,653 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்களும் பெண்களின் முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தனர். அம்மா வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தொடர்ந்து மக்களுக்கு வழங்கி வருகிறார்.

ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தாய் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் கழக ஆட்சி காலத்தில்தான் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற திட்டங்கள் ஏழை-எளிய மக்களுக்கு கிடைத்திட இந்த அரசுக்கு மக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் வைத்தியநாதன், டாக்டர்.அலீம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்க இணை செயலாளர்கள் எஸ்.அப்துல்சலாம்அன்சாரி, காஜாமைதீன், நிர்வாக குழு உறுப்பினர் இப்ராஹீம்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.