விழுப்புரம்

விழுப்புரம் கிளை சிறையில் விசாரணை கைதி மரணம்- நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்

விழுப்புரம்

விழுப்புரம் கிளை சிறையில் விசாரணை கைதி மர்ம மரணம் அடைந்தார். அவரது சாவுக்கு நீதிகேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கூ.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் மகன் முருகன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு வேடம்பட்டில் உள்ள விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு முருகனை அவரது தந்தை கணேசன் மற்றும் அவரது தாய் ஆதிலட்சுமி ஆகியோர் வேடம்பட்டு கிளை சிறைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

அப்பொழுது பெற்றோரிடம் முருகன் தன்னை வேடம்பட்டு கிளை சிறை ஜெயில் வார்டன் மற்றும் ஜெயில் சூப்பிரெண்டு மற்றும் காவலர்கள் லஞ்சமாக வாரம் 5,000 ரூபாய் கேட்டு அடித்து துன்புறுத்துவதாகவும், பணத்தை கொடுக்காவிட்டால் அடித்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 18-ந்தேதி மாலை 4.30 மணி அளவில் வேடம்பட்டு கிளை சிறையில் முருகன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் அளித்தனர். தனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை, பணத்திற்காக வேடம்பட்டு கிளை சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடித்துக் கொலை செய்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று முருகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முருகனின் பெற்றோர். முருகனின் மனைவி நளினி மற்றும் 2 குழந்தைகள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் முருகனின் பெற்றோர் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து தனது மகன் கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.