கோவை

தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம்- சிங்கை ஜி.ராமச்சந்திரன் சபதம்

கோவை,

தடைகளை பற்றி கவலைப்பட மாட்டோம். தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கூறினார்.

கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் பேசியதாவது:-

தி.மு.க.வுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் சிம்ம சொப்பனமாக எஸ்.பி.வேலுமணி விளங்குகிறார். தி.மு.க.வின் கால் தடமும் இல்லை என்று அளவிற்கு அவர் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கழகத்தை வெற்றி பெற செய்தார்.
ஆகவே கடினமாக உழையுங்கள். உயர்வு நிச்சயம் உண்டு.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை தகவல் தொழில்நுட்பப் பிரிவு சுணக்கமாக உள்ளது என கூறி வந்தார்கள். ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு தகவல் தொழில்நுட்ப பிரிவு எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதை சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பயப்பட்டதை பார்த்தாலே தெரியும்.

மின்சாரத்துறை பிரச்சினை மட்டும் அல்ல. தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை வெளி கொண்டு வந்து அவர்களை திக்குமுக்காட வைக்கும் வகையில் செயலாற்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கும் பாராட்டுக்கள்.

கடின உழைப்பிற்கு கண்டிப்பாக உயர்வு நிச்சயம். தடைகள் என்ன வேண்டுமானாலும் வரட்டும். பணியை மட்டும் நிறுத்தாதீர்கள். தரவுகளை எடுத்துக்கொண்டு ஆதாரத்தோடு பதிவுகளை எடுத்துரையுங்கள். நிச்சயம் தி.மு.க. திணறும்.

கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு எப்படி பணியாற்ற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதற்காக ‘சமூக வலைத்தளத்தில் நாம்’ என்பதை தொடங்கியுள்ளோம். இதில் கழகத்திற்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தகவல் தொழில்நுட்ப பிரிவினரை விரைவில் சந்திக்க உள்ளோம்.

இவ்வாறு கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் பேசினார்.