ஆரணி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு-போதை ஆசாமி அராஜகம்

திருவண்ணாமலை,
ஆரணி அருகே போதை ஆசாமியால் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சிறுமூர் செல்லும் அரசு பேருந்து நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் புறப்பட்டு சென்றது. பேருந்தை டிரைவர் வெங்கடேசன் ஓட்டி சென்றார். நடத்துநராக ஞானபிரகாசம் என்பவர் பணியாற்றினார்.
இப்பேருந்து சிறுமூர் அருகே சென்றபோது மதுபோதை ஆசாமி ஒருவர் பேருந்தை மடக்கி பஸ் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார். இதை தட்டிக்கேட்ட டிரைவர், கண்டக்டரை அந்த ஆசாமி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
போதை ஆசாமி தாக்கியதில் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடியா தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசு பஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.