சிறப்பு செய்திகள்

கொலை நகராக மாறிய தலைநகர்- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை

தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடலூரில் தி.மு.க. எம்.பி. தனது தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளது. கடந்த 18-ந்தேதி அமைந்தகரையில் பட்டப்பகலில் பைனான்சியர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் சென்னையில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லையாத நிலை உருவாகி இருப்பதாக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.

காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் சட்டம்- ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிகைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால் தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.