குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி-மாவட்ட கழக செயலாளர்கள் குற்றச்சாட்டு

தென்காசி
குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி செய்வதாக மாவட்ட கழக செயலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் மூலம் கழகத்தை சேர்ந்த 4 பேர், தி.மு.க.வை சேர்ந்த 4 பேர் கவுன்சிலர்களாக தேர்தெடுக்கப்பட்டனர். மறைமுக தலைவர் தேர்தல் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு திமுக கவுன்சிலர்கள் வராத காரணத்தால் இருமுறையும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட கழக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் மனு அளித்தனர்.
இதன் பின்னர் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குற்றாலம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் கழகம் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
கழக வேட்பாளர் மனு நிராகரித்தல், வாக்குச்சீட்டை கிழித்தல், வாக்கு பெட்டியில் மை ஊற்றுதல், வேட்பு மனுவை கிழித்தல், தேர்தல் அதிகாரிக்கு உடல்நலக்குறைவு என்று பொய்யான காரணங்களை கூறி தேர்தலை நிறுத்த ஆளும் தரப்பு முயன்று வருகிறது.
ஜனநாயக முறைப்படி தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்தெடுக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமரா மூலம் முழுமையாக கண்காணித்து தேர்தலை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது தென்காசி வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், குற்றாலம் பேரூர் கழக செயலாளர் கணேஷ் தாமோதரன், தெற்கு மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மபாண்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.