தமிழகம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சி – கர்நாடக அரசுக்கு கழகம் கண்டனம்

சென்னை

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து மழுப்பலான பதிலை சொன்னார்கள். மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், முதலமைச்சரும், அன்றைக்கு தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது தேர்தல் சுற்றுப்பயணத்தில் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்கள். எல்லா ஊடகத்திலும், பத்திரிகையிலும் பேட்டியும் அளித்தார்கள். தேர்தல் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு தி.மு.க. வந்துள்ளது.

ஆனால் இன்றைய தினம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக பொய்யான அறிவிப்புகளை தி.மு.க. வெளியிட்டது என்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள். பார்த்து வருகிறார்கள்.

கேள்வி:- முதல்வர் டெல்லி சென்றுள்ளார். இது குறித்து தங்களின் கருத்து?

பதில்:- டெல்லி சென்று வந்தபிறகு தான் என்ன என்று தெரியும். எந்த நோக்கத்திற்காக சென்றுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பத்திரிகை செய்தி தான் வந்துள்ளது. வந்தபின்பு அவர் சொல்கின்ற கருத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியும்.

கேள்வி:- மேகதாது அணை விவகாரம் குறித்து?

பதில்:- தமிழகத்தில் 50 ஆண்டு காலம் நம்முடைய நீரை பெறுவதற்காக அம்மா அவர்கள் இருந்த காலத்திலே சட்டப் போராட்டம் நடத்தினார். உச்சநீதிமன்றத்தில் அம்மாவின் அரசு நல்ல தீர்ப்பை பெற்று தந்தது.

நான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் அம்மாவின் அரசு நம்முடைய வாதங்களை எடுத்து வைத்து 50 ஆண்டு காலம் தீராத பிரச்சனையை உச்சநீதிமன்றம் எடுத்து சென்று நல்ல தீர்ப்பை பெற்றுதந்தோம். அப்போழுதே சொல்லியிருக்கிறார்கள். காவேரியில் எங்கும் தடுக்கவே, திருப்பவே கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு கர்நாடக அரசு தமிழகத்திற்கு வருகின்ற நீரை தடுப்பதற்காக இன்றைக்கு முயற்சி செய்து வருகிறது. மேகதாதுவில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவிப்பை தந்துள்ளார்கள். உண்மையிலேயே இது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் இருந்து கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை கொடுத்தாலும், அந்த நீர் நமக்கு போதாது.

இப்படி இருக்கும் நிலையில் மேலும் மேகதாதுவில் ஒரு தடுப்பணை கட்டினால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகி விடும். அதுமட்டுமல்ல சுமார் 16 மாவட்டங்கள் இன்றைக்கு காவேரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளது. இதனை அமல்படுத்தினால் குடிநீர் பிரச்சனை ஏற்படும். டெல்டா மாவட்டம் பாலைவனமாகி விடும். அம்மாவின் அரசு இருக்கும் போதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

கேள்வி:- டெல்டா மாவட்டம் பாலைவனமாகி விடும் என்று குறிப்பிடுகிறீர்களே.?
பதில்:- ஏற்கனவே விவசாயிகள் அச்சத்தில் இருந்தார்கள். விளைச்சல்கள் பறிபோய் விடும் என்ற நிலையிலே அந்த வேளாண் பெருமக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக அவர்கள் பல ஆண்டுகள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அம்மாவின் அரசு மத்திய அரசுடன் போராடி, வாதாடி, டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.