தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை முயற்சி-சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை

சாதி பெயரை சொல்லி தி.மு.க.வினர் இழிவுபடுத்தியதால் மன உளைச்சல் அடைந்த ஊராட்சி மன்ற தலைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராணிப்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. பட்டியலினத்தை சேர்ந்த இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு கழகத்தின் ஆதரவோடு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார்.

அதே ஊராட்சியில் கடந்த 28 ஆண்டுகளாக வரி தண்டலராக பணியாற்றி வரும் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் தனலட்சுமி ஆகியோர், பட்டியலின பெண் என்பதால் சரஸ்வதியை பணி செய்ய விடாமல் தடுத்து வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதியை, வரி தண்டலர் ரவிச்சந்திரன் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சரஸ்வதி வீட்டிற்கு சென்று ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இஅவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவி சரஸ்வதி, தான் பட்டியலின பெண் என்பதால் ஒவ்வொரு நாளும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேவையில்லாத பிரச்சினையில் ரவிச்சந்திரன் ஈடுபடுவதாகவும், சாதி பெயரை சொல்லி தன்னை இழிவுபடுத்துவதோடு தங்களுக்கு இடையூறாக இருந்தால் எதை செய்யவும் தயங்க மாட்டேன் என மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ரவிச்சந்திரனின் அதே ஊராட்சியில் துணைத்தலைவராக உள்ளார். மேலும் இவர் திமுக ஒன்றிய குழு பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருவதாக கூறப்படுகிறது.

அமைச்சர் காந்திக்கு நெருங்கமானவர் என்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தி.மு.க,வில் பொறுப்பு வகித்து வருவதாகவும், தங்களை மீறி யாரும் எந்த பணியையும் செய்துவிட முடியாது என்று ரவிச்சந்திரன் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வினரின் மிரட்டலால் மன உளைச்சல் அடைந்த ஊராட்சி தலைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.