மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை,
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரச மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
சென்னை எழும்பூரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி:- அடுத்து நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் என்று பா.ஜ.க.வும், பா.ம.க.வும் தொடர்ந்து கூறி வருகிறதே?
பதில்:- ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஆசை உண்டு. இது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் டீசலுக்கு 5 ரூபாயும், பெட்ரோலுக்கு 4 ரூபாயும் குறைப்போம் என்று தெரிவித்தார்கள்.
டீசல் குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை. ஏற்கனவே மத்திய அரசு பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 5 ரூபாயும் குறைத்தது. அப்போதும் இவர்கள் வாயை திறக்கவில்லை. மத்திய அரசு இப்போது டீசலுக்கு 9 ரூபாயும், டீசலுக்கு 8 ரூபாயும் குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் விலையை குறைத்துள்ளன.
தி.மு.க.வை பொறுத்தவரையில் நிதி அமைச்சர் வாய்ப்பே இல்லை என்று சொல்கிறார். தோழமை கட்சியாக இருக்கின்ற கம்யூனிஸ்டு கட்சி கூட விலையை குறைத்து விட்டது. நீங்கள் ஏன் இன்னும் குறைக்கவில்லை. வாய் கிழிய வாக்குறுதிகளை அளித்து விட்டு இப்போது ஏன் பின்வாங்கி செல்கிறீர்கள். இந்த ஆட்சிக்கு சுயபுத்தி இல்லையா? அமைச்சருக்கு சுய புத்தி இல்லையா?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பொருளாதார நிபுணர்களை வைத்தா ஆட்சி நடத்தினார். புரட்சித்தலைவி அம்மா பொருளாதார நிபுணர்களை வைத்தா ஆட்சி நடத்தினார்? நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு வரி விதிக்காமல் அதே நேரத்தில் வருவாயை கூட்டி, மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள்.
இது தான் திறமையான ஆட்சி. விடியா ஆட்சிக்கு சொல் புத்தியும், சுய புத்தியும் இல்லாமல் உள்ளது. தமிழகத்தில் வருவாயை பெருக்க பொருளாதார நிபுணர்கள் 5 பேரை நியமித்தார்கள். இவர்களை நியமித்து 1 வருடம் ஆகிறது. ஏதாவது அறிக்கை அளித்துள்ளார்களா? அவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் அரசு அளித்துள்ளது.
வருவாயை பெருக்குவதற்கு என்ன அறிக்கை அளித்தார்கள். மத்திய அரசின் மீது பழியை போட்டு தப்பிக்கும் வேலையைதான் தி.மு.க. அரசு செய்து வருகிறது. மக்களுக்கு சுமை இல்லாமல் மாநில அரசின் வருவாயை பெருக்குவதற்கு உண்டான வேலையை செய்தால் அது பாராட்டக்கூடிய விஷயம்.
கேள்வி:- தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தகவல்கள் வருகிறதே?
பதில்:- இன்றைக்கு கூட எதிர்க்கட்சி தலைவர் சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தலைநகரா? கொலை நகரா? இப்படிதான் சென்னை இன்றைக்கு மாறிவிட்டது. அடிப்படை கட்டமைப்பு வசதியில் தோல்வி. சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வி.
இந்த இரண்டை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. பட்டப்பகலில் கொலை, ரவுடிகள் ராஜ்ஜியம், ஆளும் கட்சியின் அராஜகம். தலைநகரம் கொலை நகரமாக மாறியுள்ளது தான் இன்றைய தமிழகத்தின் நிலை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.