மேட்டூர் அணையை முன்கூட்டி திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும்-முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து

சேலம்
மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை முன்கூட்டியே நேற்று திறக்கப்பட்டது. இது தொடர்பாக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. பயிரிடும் காலத்தை கணக்கில் கொண்டு வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி திறப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது.
முன்கூட்டியே திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில்தான் கலக்கும் என்பதை டெல்டா மாவட்ட விவசாயிகளே கூறுகிறார்கள். அணையின் நீர்மட்டம் 120 அடி எட்டுகிற போது சேலம் மாவட்டத்தில் உள்ள 103 ஏரிகளை நிரப்பும் திட்டம் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதால் அதை நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலையை அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகமே திட்டமிட்டு செய்கிறதோ என்று சேலம் மாவட்ட ஏரி பாசன விவசாயிகள் சந்தேகப்படுகிற விதமாக அரசின் செயல்பாடு இருக்கிறது.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முன்கூட்டியே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வரவேற்கக் கூடியது என்றாலும், ஏரிகளை நிரப்பும் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றி சேலம் மாவட்ட குறிப்பாக பாசன வசதி பெறும் நான்கு தொகுதி விவசாயிகளின் மனம் குளிரும் வகையில் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகளின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.