தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமியை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல்

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியை அவரது சொந்த தொகுதியான ஆத்தூரிலேயே பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணப்பட்டி ஊராட்சி ஏ.டி. காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கழிவுநீர் வாய்க்கால் வசதி முறையாக ஏற்படுத்தி தரவில்லை.

இதனால் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட அனைவரும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக மழை காலங்களில் சிறிய கழிவுநீர் ஓடை கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீட்டிற்குள் புகுந்து வருவதால் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சொல்லெணா துயரத்தில் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டி.பண்ணப்பட்டி ஊராட்சிக்கு வந்தபோது அப்பகுதி மக்கள் அவரது காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என கூறி சென்ற அமைச்சர் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சொந்த தொகுதியாகும். இத்தொகுதியில் தொடர்ந்து பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.