சிறப்பு செய்திகள்

எது எதிர்க்கட்சிகளின் பணி: முதல்வர் விளக்கம்

நாகப்பட்டினம்

எது எதிர்க்கட்சிகளின் பணியாக இருக்கவேண்டும் என்று முதல்வர் விளக்கம் அளித்து பேசினார்.

இன்று நாகப்பட்டினத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது

அம்மா அவர்கள் வழியில் நடைபெறுகின்ற அரசு எங்கள் அரசு. அனைத்துத் துறைகளிலும் தேசிய விருதுகளைப் பெறுவதற்கு அமைச்சர்கள் இரவு, பகல் பாராமல் மக்கள் பணி செய்து அந்தந்தத் துறைகளில் விருதுகளைப் பெறுகின்ற அரசாக எங்களுடைய அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இவரா எதிர்க்கட்சி தலைவர்

மத்திய அரசு, தமிழ்நாடு அரசிற்கு நல் ஆளுமை விருது, தரவரிசையில் முதலிடம் எப்படிக் கொடுத்தார்கள், முதலிடம் கொடுத்தவரை அழைத்து வாருங்கள் நான் அவரை அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்கிறார். அரசு அதிகாரிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு, எங்களோடு சேர்ந்து பணியாற்றி, முழு மூச்சுடன் செயல்பட்டு, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, இன்றைக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஆளுமை திறனிலே முதலிடம் பெற்றுள்ளோம். பாராட்ட மனமில்லை என்றாலும் பரவாயில்லை, குறைகூறி பேசாமல் இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். பாராட்டியவரை அடிக்க வேண்டும் என்று சொல்கின்ற இவரா எதிர்க்கட்சி தலைவர்? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.

அரசுக்கு தூண்டுகோலாக இருக்கவேண்டும்

ஒரு விளக்கு எரிந்து கொண்டு இருக்கின்றது என்றால், அதன் திரியை தூண்டி விட்டால் பிரகாசமாக எரியும். அதைப்போல ஒரு அரசுக்கு தூண்டுகோலாக இருந்தால் அந்த அரசுக்கு மேன்மேலும் பல திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு வழங்கி ஒரு சிறந்த அரசாக விளங்கும். அதுதான் எதிர்க்கட்சியின் வேலை. சிறந்த நிர்வாக திறன்மிக்க இந்த அரசை, வேண்டுமென்றே திட்டமிட்டு, கொச்சைப்படுத்தி, பேசுகின்றவரா எதிர்க்கட்சி தலைவர்? சிந்தித்து பாருங்கள். எவ்வளவு கடின உழைப்பு. இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருக்கிறது என்று சொன்னால் அது சாதாரண விஷயமா?

அனைவரின் பாராட்டு

இன்றைக்கு படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், அறிஞர்கள் எல்லாம், இந்த அரசை பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, இன்றைக்கு தமிழ்நாடு அரசு ஆளுமை திறனிலே முதலிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் அனைவருக்கும், அதற்கும் மேலாக மக்கள் எங்களுக்கு வழங்கிய நல்ஆதரவுக்கும், நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.இவ்வாறு பேசினார்.