சிறப்பு செய்திகள்

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுடன் விடியா தி.மு.க. அரசு கைகோர்ப்பு-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டதாகவும், ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுடன் விடியா தி.மு.க. அரசு கைகோர்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 10.6.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள, கழக வழிகாட்டுக குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விசண்முகம்

ராமநாதபுரம் மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், முகுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளருமான ஆர்.தர்மர் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் நேற்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிகழ்வின்போது கழக துணை ஒருங்கிணைப்பாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

இதன் பின்னர் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர், விழுப்புரம் மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் சேர்மனும், ஒன்றிய கழகத்தினுடைய செயலாளருமான தர்மர் ஆகியோர் இன்றைக்கு கழகத்தின் சார்பாக ராஜ்யசபா உறுப்பினர் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த இருவருக்கும் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கட்சி நிறுவனத்தலைவர் அய்யா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதோடு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாரத பிரதமர், உள்துறை அமைச்சர், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர்

அண்ணாமலை ஆகியோரும் இதற்காக எங்களுக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை கழகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இன்றைக்கு காவல்துறை தலைவரே ஞ்சாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற அறிவிப்பை வெளியிட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து கொண்டிருக்கிறார். இன்றைய தினம் கூட சுகாதாரத்துறை அமைச்சர் கிட்டத்தட்ட 102 டன் கஞ்சா பிடிபட்டது என்று சொல்லியிருக்கிறார்கள்.

102 டன் என்றால் 1 லட்சத்து 2 ஆயிரம் கிலோ. ஆக, இவ்வளவு கஞ்சாவை தமிழகத்தில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள், அதை இன்று கண்டுபிடித்ததாக சொல்லியிருக்கிறார். கண்டுபிடிக்காதது எவ்வளவு இருக்கும் என்பதை நாம் எண்ணி பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் இன்றைக்கு கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதனால், மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள், அவர்களது வாழ்வே சீரழியக்கூடிய நிலையை நாம் பார்க்கன்றோம். நடைபெற்று முடிந்த காவல்துறை மானியத்தில் முதலமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள், சுமார் 2200 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள். அதில் 148 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

கஞ்சா இருந்தால் தான் வழக்கே பதிவு செய்ய முடியும். சுமார் 2200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால், அவ்வளவு பேரையும் கைது செய்திருக்க வேண்டுமே, கைது செய்யாததற்கு என்ன காரணம்? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் இதிலே தலையிட்டு, இன்றைக்கு இந்த கஞ்சா விற்பனை நடைபெற்று கொண்டிருக்கின்ற காரணத்தினாலே தான், காவல்துறையினுடைய கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால் இந்த கஞ்சா விற்பனையை தடை செய்யலாம், இளைஞர்களையும், மாணவர்களையும் காப்பாற்றப்படலாம்.

இன்றைக்கு அதிக அளவிலே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றது. இதையெல்லாம் இந்த அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு நானும் அறிக்கை வெளியிட்டேன், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டார். ஏற்கனவே சட்டமன்றத்திலும் இதுகுறித்து நான் பேசினேன்.

ஆனால், இந்த தி.மு.க. அரசு ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இன்றைக்கு நம்முடைய இளைஞர்கள், மாணவர்களுடைய வாழ்வு சீரழியக்கூடிய நிலையை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

அதேபோல, ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று நானும் அறிக்கை வெளியிட்டேன், கழக ஒருங்கிணைப்பாளரும் அறிக்கை வெளியிட்டார். நான் சட்டமன்றத்தில் இது குறித்து பேசினேன். எனவே, ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும், அதனால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால் விலைமதிக்க முடியாத உயிர்களை இழக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசு, இதற்கு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டவாறு, ஒரு தனி சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இதை தடை செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதையும் அவர்கள் செய்யவில்லை. இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாக சொல்லியிருக்கின்றார்கள்.

காவல்துறை தலைவரின் அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருக்கிறார், எல்லா பத்திரிகையிலும் வந்த செய்தி. அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறார், ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை சில நடிகர்கள் விளம்பரம் செய்கிறார்கள். அதை பார்த்து ஏமாந்து விட வேண்டாம், இந்த ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் முதலிலே அவர்களுக்கு அதிக பணம் கிடைப்பதை போல சூழ்ச்சி செய்வார்கள்.

பிறகு படிப்படியாக அவர்களிடத்தில் இருக்கின்ற பணத்தையெல்லாம் கறந்து அவர்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டு விடுவார்கள். அதனால் குடும்பமே சீரழிந்து விடும் என்று பத்திரிகையில் தெரிவித்திருக்கிறார், இதனால், உயிரை கூட இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்று காவல்துறை தலைவர் தெரிவிக்கிறார்.

ஆனால் இந்த அரசாங்கம் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறது. இளைஞர்களையும், மாணவர்களையும் காப்பாற்ற தவறுகிறது. இன்றைக்கு ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தில், நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் கூட்டு வைத்துக்கொண்டு, செய்யக்கூடாது என்ற அச்சம் இன்று மக்களிடையே நிலவுகிறது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை காக்கக்கூடிய காவல்துறை தலைவரே இதை பற்றி சொல்கிறார் என்றால், இந்த அரசு ஏன் மவுனமாக இருக்கிறது? ஆகவே இதையெல்லாம் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தில் இதையெல்லாம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்றால், சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இதை நிறைவேற்றலாம் என்று சொல்லியிருக்கிறது. நானும் இதை சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

ஆனால் இந்த அரசாங்கம், ஆன்- லைன் ரம்மி சூதாட்ட நிறுவனத்தோடு இணைந்து, இதை தடை செய்வதற்கு மனமில்லை, மனம் இருந்தால் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்ட திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இதை தடை செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.