தமிழகம்

பாலக்கோடு அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 6.3.2020 அன்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், மனையேறிப்பட்டியில் அமைந்துள்ள அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு 3 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் அரசு மறுவாழ்வு இல்லங்களில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி போன்ற வசதிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், உடல் திறனுடைய இல்லவாசிகளுக்கு பாய் நெய்தல், துணி நெய்தல், தையல் மற்றும் காலணி தயாரிப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய ஊதியமும் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், மனையேறிப்பட்டியில் அமைந்துள்ள அரசு மறுவாழ்வு இல்லக் கட்டடம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்ததால் இல்லவாசிகளின் நலன் கருதி புதிய கட்டடம் கட்டுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, இல்லவாசிகளின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மனையேறிப்பட்டி அரசு மறுவாழ்வு இல்லப் புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

முதலமைச்சர் கடந்த 13.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும்” என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியில் அமைந்துள்ள சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு, 3 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், துயில் கூடங்கள், ஆற்றுப்படுத்தும் அறை, பல்நோக்கு கூடம், பொழுதுபோக்கு அறை, மருத்துவ அறை, கண்காணிப்பாளர் அறை, அலுவலக அறை, குளியலறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.விஜயராஜ் குமார், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் எஸ்.மதுமதி, சமூக பாகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.