கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

சேலம்,
நில அபகரிப்பு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பார்வதி, அருள் சக்தி, செல்வமணி. இவர்களுக்கு சொந்தமான 4000 சதுர அடி நிலத்தை சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து கொண்டதாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். இதற்கு போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பார்வதி, அருள் சக்தி, செல்வமணி ஆகியோர் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளனர். அதில் தி.மு.க. பிரமுகர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பசுபதி பாண்டியனின் மனைவி மற்றும் அடியாட்கள் எங்களை வீடு புகுந்து சரமாரியாக தாக்கினர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்த புகார் குறித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு ஆட்சியர் கார்மேகம் கார் முன்பு திடீரென தங்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், அந்த மூன்று பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மூன்று பெண்களையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான 4,000 சதுர அடி நிலத்தை தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து கொண்டார். இதனை கேட்டால் அடியாட்களை வைத்து நாள்தோறும் அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
நாங்கள் காவல் நிலையம் சென்றால் ஆளும் கட்சி பிரமுகருக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு வருகின்றனர். எனவே எங்களின் நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இல்லையென்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.