திராவிட மாடல் அரசிடம் நிர்வாக திறமை இல்லை-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை
கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு அடிப்படை தேவையாக விளங்குவது சட்டம்-ஒழுங்கு. ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்றால், அந்த மாநிலத்தின் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் அதன் பொருள்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, அதன் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. சூதாட்டம், சாராயம், போதை, கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. முதலமைச்சரோ ‘திராவிட மாடல்’ ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.
ஆனால், தமிழ்நாட்டில் நாள்தோறும், வெட்டுக் குத்து, கொலை, தற்கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் தான் அதிகம் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை இதுதான் ‘திராவிட மாடல்’ போலும்.
நடுரோட்டில் அரிவாளால் வெட்டுதல், பட்டப்பகலில் அரிவாளால் சரமாரியாக தாக்குதல் என்பதையெல்லாம் தாண்டி, அரசு அலுவலகத்திலேயே வெட்டுக் குத்து சம்பவம் தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் அரங்கேறி இருக்கிறது என்றால், அந்த அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சீரழிந்திருக்கிறது.
தேனி மாவட்டம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரியாக ராஜ ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றி வருவதாகவும், அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளநிலை உதவியாளர் உமாசங்கர் பல்வேறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும்,
தற்போது அவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும், இளநிலை உதவியாளர் மீது துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும்,
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளநிலை உதவியாளர் திட்ட அலுவலரின் அறைக்கு சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டியதாகவும், ரத்த வெள்ளத்தில் இருந்த திட்ட அலுவலர் ராஜ ராஜேஸ்வரியை சக ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்ததாகவும், இதற்கு காரணமான இளநிலை உதவியாளரை காவல் துறையிடம் ஒப்படைத்தாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
இதிலிருந்து, தி.மு.க. ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது என்பது தெள்ள தெளிவாகிறது. தி.மு.க.வினருக்கு பயந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் இனி சக ஊழியர்களுக்கும் அஞ்சி நடக்க வேண்டிய நிலை தற்போது தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க.வினரின் தலையீடு பரவலாக இருப்பதும், அவர்களோடு சில அரசு ஊழியர்கள் கைகோர்த்து இருப்பதும்தான் இதுபோன்ற செயலுக்கு காரணம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலை நீடித்தால், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகும். அரசு அலுவலகங்களுக்குள் செல்பவர்களை எல்லாம் பரிசோதனை செய்து அனுப்ப வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை தான் இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணம். இது கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரி விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பணியில் சேர வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் மற்ற பிரச்சினைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சட்டம்- ஒழுங்கினை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், திட்ட அதிகாரியை தாக்கிய இளநிலை உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.