தற்போதைய செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.12.12 கோடியில் புதிய கட்டடங்கள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 6.3.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டத்தில் 4 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் மற்றும் பயிற்சியாளர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், காட்டுமன்னார்கோயில், கிண்டி மற்றும் ஆண்டிமடம் ஆகிய இடங்களில் 7 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணவர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யவும், தொழில்திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், அரசின் சார்பில் தொழிற்பயிற்சி நிலையங்களை கூடுதலாக தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை துவக்குதல், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை பூர்த்தி செய்ய தொழில் கல்வி படித்தவர்களும், தொழில் திறன் பெற்றவர்களும் தேவை என்பதனைக் கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 5 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டத்தில் 4 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் மற்றும் பயிற்சியாளர் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் 5 கோடியே 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் மற்றும் பயிற்சியாளர் விடுதிக் கட்டடம், சென்னை மாவட்டம், கிண்டி, அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆர்க்கிடெக்சுரல் டிராப்ட்ஸ்மேன் தொழிற்பிரிவுக்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடம், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டூல் அண்டு டைமேக்கர் தொழிற்பிரிவுக்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடம்; என மொத்தம் 12 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களைமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு நிலவரங்களை கண்காணிக்க ITPA எனும் புதிய கைபேசி செயலியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.

உலக அளவிலான திறன் போட்டிகள் மற்றும் இந்திய திறன்கள் எனப்படும் தேசிய அளவிலான திறன் போட்டிகள் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மண்டல அளவிலும், அதனை தொடர்ந்து தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். புதுடெல்லியில் அக்டோபர் 2018-ம் ஆண்டில் நடைப்பெற்ற தேசிய அளவிலான திறன் போட்டியில், சுகாதாரம் மற்றும் சமூக நலன் பிரிவில் தங்கப் பதக்கமும், ஆகஸ்டு 2019-ல் ரஷ்யா நாட்டின், கஷான் நகரில் நடைபெற்ற உலக திறன் போட்டியில் “Medallion for Excellence” பதக்கமும் வென்ற செல்வி தஸ்லீம் முகைதீன், தேசிய அளவிலான திறன் போட்டியில் பிளாஸ்டிக் டை என்ஜினியரிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற செல்வன் விஸ்வநாதன் முத்துப்பாண்டி, சி.என்.சி மில்லிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற செல்வன் கணேசன் ராமகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
டாக்டர் நிலோபர் கபீல், அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.