சிறப்பு செய்திகள்

முதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு

திருவாரூர்

திருவாரூரில்  விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு காவேரி காப்பாளர் பட்டத்தை விவசாயிகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

சிறப்பு வேளாண் மண்டலம்

காவேரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருவாரூரில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளின் கூட்டத்தினரிடையே தானே மாட்டுவண்டியை ஓட்டி வந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.

காவிரி காப்பாளர்

விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு காவேரி காப்பாளர் பட்டத்தை காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மன்னார்குடி சீ.ரங்கநாதன் வழங்கி பாராட்டு தெரிவித்து பேசியதாவது.

பாலைவனமாக மாற இருந்த டெல்டாவை முதல்வர் காப்பாற்றியுள்ளார்.விவசாயி ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்ற எங்களின் கனவு நிறைவேறியுள்ளது.அவர் செயல் வீரர்.செயல் தீரர் என்பதை தாராளமாக எங்களால் சொல்ல முடியும்.முதல்வர் அம்மா சட்டத்தின் வழியில் நமக்கு பல நன்மைகளை செய்தார்.தற்போது நமது முதல்வர் நமக்கு சட்டத்தையே தந்துள்ளார்.இந்தியாவிலேயே இதுபோன்ற முதலமைச்சர் யாரும் கிடையாது.
அவர் காப்பாளர்தான்.ஆம்—- எதிர்காலத்தை காப்பவர்..எதிர்கால விவசாயத்தை காப்பவர்.இவ்வாறு பேசினார்.

முதல்வர் உறுதி

இந்நிகழ்ச்சியில் கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி, வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி உள்பட 17 அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காவேரி காப்பாளர் பட்டம் வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் காவேரி டெல்டா மாவட்டங்களில் ரூ.15 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் மண்டலம் அமைக்கப்படும் என்றும் நெல் ஜெயராமன் பெயரில் நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் அறிவித்தார். காவேரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை கழக அரசு நிறைவேற்றியே தீரும் என்றும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.