ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி தமிழக மாணவ- மாணவிகளுக்கு எதிர்க்கட்சி கொறடா வாழ்த்து

கோவை,
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவர்களுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவையில் நல்லறம் அறக்கட்டளை அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி மூலம் இலவச பயிற்சிகளை சமூக அக்கறையுடன் வழங்கி வருகிறது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற கோவை காந்திபுரம் காட்டூரை சேர்ந்த ரம்யா என்ற மாணவி குடிமை பணி தேர்வில் தேசிய அளவில் 46-வது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதே மையத்தில் பயின்ற
கோவை டவுன்ஹால் கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த மாணவர் கமலேஷ் தேசிய அளவில் 297-வது இடம் பிடித்து தேர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதவில் கூறியிருப்பதாவது:-
அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையத்தில் பயின்று அகில இந்திய குடிமை பணிகள் தேர்வில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்றுள்ள கோவையை சேர்ந்த ரம்யா மற்றும் கமலேஷ் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை நல்லறம் அறக்கட்டளை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமியில் இலவச பயிற்சி மையம் வாயிலாக சமூக அக்கறையுடன் பொதுச்சேவையில் முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருப்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், தொப்பம்பட்டியை சேர்ந்த சுவாதிஸ்ரீ , அகில இந்திய அளவில் 42-வது இடமும், தமிழக அளவில் முதல் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கும் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த 27 பேருக்கும் என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.