கழக அரசின் சாதனைளை விளக்கி கிராமங்கள் தோறும் பிரச்சாரம்- அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவு

சென்னை
கழக அரசின் சாதனைகளை விளக்கி கிராமங்கள் ேதாறும் பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அம்மா பேரவை சார்பில் பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை நேற்று முன்தினம் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. செய்திருந்தார்.
நேற்று இரண்டாவது நாளாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தம்பிதுரை, பா.வளர்மதி, பொன்னையன், வைகைச்செல்வன் கடம்பூர் ஜெ.ராஜூ, டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்று கருத்துகளை வழங்கினர்.
இந்த முகாமில் பொன்விழா காணுகின்ற மாபெரும் மக்கள் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வரலாறு, தாய் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வளர்ந்தது எப்படி, தற்போது தி.மு.க. ஆட்சி நடத்தும் திராவிட மாடல் ஆட்சியின் உண்மை நிலை என்ன? தன்னை அறிதல், எண்ணங்களை மேம்படுத்துதல், தனி மனித மேம்பாடு, உறவுகள் மற்றும் உணர்வுகள் மேம்படுத்துதல்,
பேச்சாற்றல் வளர்த்தல், எழுத்தாற்றல் வளர்த்தல், கழகப் பணிகள், மக்கள் தொடர்புக்கான பண்புகளை வளர்த்தல், செயல் திறன் வளர்த்தல், சாதனை விளக்க திண்ணைப் பிரச்சாரம், டிஜிட்டல் பிரச்சாரத்தின் அவசியத்தை அறிதல், வெற்றிக்கான திறவுகோல், தாயுள்ளம் கொண்ட தலைமையின் மாண்பையும் சிறப்பையும் பெருமையையும், தரணி எங்கும் எடுத்து செல்லுதல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
கழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி பீடத்தில் இருந்து மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி உள்ளது. குறிப்பாக கடந்த 4 ஆண்டு காலத்தில் எடப்பாடியார் தலைமையிலான ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அம்மாவின் ஆட்சியில் பல்வேறு வரலாற்று சாதனை தொகுப்பு திட்டத்தை சாதனை புத்தகங்களாக கழக ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டார்கள்.
குறிப்பாக அம்மா அரசின் சாதனைகள் திட்டங்களை நாம் எடுத்துச் சொல்வது மட்டுமல்லாது கடந்த தி.மு.க. ஓராண்டு கால வேதனை ஆட்சியையும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிராமம் தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரத்தை கழக அம்மா பேரவையினர் மேற்கொள்ள வேண்டும். அதில் நம் சாதனையை சொல்லுவது மட்டுமல்லாது அந்த பகுதிகளில் நாம் செய்த சாதனைகளையும் தி.மு.க.வினரின் அராஜகத்தையும் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.
இப்போது டிஜிட்டல் யுகமாக மாறி வருகிறது. கிராமங்களில் பெரிய கூட்டங்களை போடுவது அவசியம் இல்லை. அந்த பகுதியில் உள்ள சங்கங்கள் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று நிகழ்ச்சியை நடத்தி அதை 10,000 மக்களுக்கு வலை தளங்களில் சென்று சேரும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அந்நாட்டு அரசையே திருப்பி போட வைத்து விட்டது. நேற்று நாம் நடத்திய இந்த கூட்டம் திராவிட மாடலுக்கு போட்டியா என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
ஆகவே கழக அம்மா பேரவை தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, சட்டமன்ற தேர்தல் என்றாலும் சரி நாம் ராணுவ சிப்பாய்களாக இருந்து கடைக்கோடி மக்களுக்கும் அம்மா திட்டங்களையும், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியதையும் மக்களுக்கு நீங்கள் தோலுரித்து காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.