தற்போதைய செய்திகள்

கரோனா வைரஸ்: தேனியில் புதியதாக ரத்த பரிசோதனை மையம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

சென்னை 

கரோனா வைரஸ் தொடர்பாக தேனியில் புதியதாக ரத்த பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தீவிர கண்காணிப்பு

சீனா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் நோய் பரவி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா, தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் பயணிகளை கண்காணிக்கவும் பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒருவருக்கு கரோனா வைரஸ்

நவீன கருவிகளுடன், கைகளை சுத்தம் செய்ய கூடிய கருவிகளும் வைக்கப்பட்டு உள்ளது.தினமும் 52 விமானங்களில் 8500 பயணிகள் வருகின்றனர். தற்போது சீனா ஜப்பான், இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் அனைத்து விமானங்களிலும் பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர்.இதுவரை விமான நிலையங்களில் 1 லட்சத்தி 111 பேரை பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 1243 பேரை தொடர்ந்து 28 நாட்களாக கண்காணித்து வரப்படுகின்றனர்.இந்நிலையில் ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாகசுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தொடர் கண்காணிப்பு

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு மக்கள் கூடுமானவரையில் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொது இடங்களில் அதிகமாக கூடாமல் இருப்பது நல்லது.தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். நோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன. மஸ்கட்டில் இருந்து வந்த 27 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தேனியில் ரத்த பரிசோதனை மையம்

60 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 59 மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ஓமனிலிருந்து வந்த நபருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரை விமான நிலையத்தில் முதலில் சோதனை செய்தபோது கரோனா அறிகுறி இல்லை.அவர் எங்கெல்லாம் பயணம் செய்தார் என்ற விவரங்களை கேட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனியில் புதிதாக ரத்த பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1086 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.