தற்போதைய செய்திகள்

அம்மா அரசின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது- எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி முழக்கம்

சென்னை,

மோசமான ஆட்சிக்கு தி.மு.க. ஆட்சியே உதாரணம் என்றும் அம்மா அரசின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை நேற்று முன்தினம் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும்,

முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்து தீர்மான நகலை வெளியிட்டனர். இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமில் கழகத்தின் முன்னோடிகள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சி முகாமில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

எந்த சோதனைகள் வந்தாலும் தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக அம்மா பேரவை திகழ்ந்திருக்கிறது. கழகத்திற்கு இணையாக அம்மா பேரவை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

தற்போது தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் எந்த சாதனையும் செய்யவில்லை. வேதனையை தான் மக்களுக்கு கொடுத்துள்ளனர். அம்மா இருக்கும்போதும் சரி, அம்மாவின் மறைவுக்கு பிறகும் சரி, தமிழகத்திற்கு நாம் பல்வேறு வரலாற்று திட்டங்களை கொடுத்துள்ளோம்.

சட்டமன்ற தேர்தலின்போது சிறிய எதிர்ப்பு கூட நமக்கு இல்லை. தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தோம். அந்த அளவுக்கு திட்டங்களை அளித்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திட்டங்களை அளித்துள்ளோம். ஒவ்வொரு துறையிலும் திட்டங்களை தந்துள்ளோம். உயர்கல்வி துறையில் செய்த சாதனைகளை இனிமேல் யாரும் முறியடிக்க முடியாது.

கொரோனா காலத்தில் நமது அமைச்சர் செயல்பட்டதுபோல வேறு யாரும் செயல்பட்டிருக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளை சந்தித்தார். அதற்கு முன்னரே நமது அமைச்சர் கொரோனா நோயாளிகளை சந்தித்து பேசியது வரலாறு. அனைவரும் சென்று பார்த்து விட்டு வந்தார்கள். ஸ்டாலின் எதுவும் செய்யாமலேயே விளம்பரம் செய்து வருகிறார். தி.மு.க.

ஆட்சியில் எவ்வளவு மின்வெட்டு இருந்தது. நமது ஆட்சியில் மின்துறை எப்படி செயல்பட்டது. இது அனைவருக்கும் தெரியும். மின் வெட்டை சீர்செய்து மின் மிகை மாநிலமாக அம்மா ஆட்சி கொண்டு வந்தது. அதுபோல உள்ளாட்சித்துயைில் 143 விருதுகளை பெற்றுள்ளோம்.

கிராமங்களில் 1 லட்சத்து 2 ஆயிரம் சாலைகள் தான் இருந்தது. புதியதாக 50 ஆயிரம் சாலைகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இதனை செய்யவில்லை. தி.மு.க. ஆட்சி முடியும்போது கூட்டு குடிநீர் திட்டம் 4,945 எம்.எல்.டி. தான் இருந்தது.

அதற்கு பிறகு 2400 டி.எம்.டி. தண்ணீரை புதியதாக தினமும் கூடுதலாக வழங்கினோம். தமிழ்நாடு முழுவதும் அனைத்து பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் வழங்கினோம். இப்படி ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தோம். இந்தியாவில் இதுபோன்ற திட்டங்களை வேறு யாரும் கொண்டு வரவில்லை. இதுபோன்று அம்மா

இருக்கும்போது சரி, எடப்பாடியார் ஆட்சியிலும் சரி பல்வேறு சாதனைகளை செய்தோம்.

தற்போது தி.மு.க. ஆட்சியில் லேபிளை ஒட்டி நம்முடைய திட்டங்களை மட்டும்தான் திறந்து வருகிறார் முதல்வர். இரண்டு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து விட்டார்கள். எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள். ஒரு வருடத்தில் இவ்வளவு மோசமான ஆட்சி என்பது

யாரிடத்திலும் கிடையாது. இதனைதான் நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். நம்முடைய கட்சியினருக்கு மட்டும் தெரிந்தால் போதாது. இதுபோன்ற தகவல்கள் மக்களுக்கு போய் சேரவேண்டும். நகரம், ஒன்றியம், ஊராட்சிகளில் நாம் செய்த சாதனைகளையும் சொல்ல வேண்டும். தி.மு.க. அரசின் அவல நிலையையும் எடுத்து சொல்ல வேண்டும்.

இன்று ஒரு லோடு மணல் எடுக்க முடிகிறதா? இதற்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள். கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இதனை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மோசமான ஆட்சிக்கு தி.மு.க. ஆட்சியே உதாரணம். ஒன்றே ஒன்றுதான்.

விளம்பரம் மூலம் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு எங்கு சென்றாலும் விளம்பரம் தான். இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டும் அவர் விளம்பரம் தரவில்லை. தமிழ், தமிழ் என்று சொல்லி விட்டு அரசு பணத்தை செலவு செய்து இந்தியா முழுவதும் இந்தியில் விளம்பரம் தந்துள்ளார்கள். கண்டிப்பாக

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் முழுமையாக 40 இடங்களில் வெற்றி பெறுவோம். மக்கள் நமக்கும், நம்முடைய கூட்டணிக்கும் வாக்களிக்க போகிறார்கள். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

மறைந்த முதல்வர் அம்மா சட்டமன்றத்தில் 100 ஆண்டு காலம் இந்த கட்சியும், ஆட்சியும் இருக்கும் என்று தெரிவித்தார். அதேபோல் வரும் தேர்தலில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இந்த புனிதமான இடத்திலிருந்து நாம் பேசுகிறோம். அது கண்டிப்பாக நடக்கும். இருக்கும் அணியிலேயே சிறப்பாக செயல்படுவது அம்மா பேரவை. இது போல மற்ற அணிகளும் செயல்படவேண்டும். புதிய உறுப்பினர்களை கட்சியில் சேருங்கள். இளைஞர்களை சேருங்கள்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.