சேலத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

சேலம்
சேலத்தில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய கல்லூரி மாணவர் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த முகமதுரபீக் மகன் அப்துல்கலாம். இவர் சேலம் சின்னதிருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு கல்லூரி பேருந்தில் சென்று வருவது வழக்கம். அவ்வாறு நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து அவர் கல்லூரி பேருந்தில் வீடு திரும்பினார்.
அப்போது பேருந்து கல்லூரியை விட்டு வெளியே வந்த சில மீட்டர் தூரத்தில் உள்ள வளைவில் சென்றபோது ஓடும் பேருந்தில் இருந்து அப்துல்கலாம் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அப்துல்கலாம் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சக மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கல்லூரி வளாகம் முன்பு திரண்டு கல்லூரியின் பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.