தென்காசி

கடையம் ரெட்டைகுளம் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

தென்காசி

தி.மு.க. மாவட்ட செயலாளர் கொடுத்த அழுத்தத்தினால் கடையம் ரெட்டைகுளம் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் ரெட்டைகுளம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுகவை சேர்ந்த காசிநாடார் என்பவர் தலைவராக இருந்து வருகிறார். இவர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்களை தனியாருக்கு விற்பனை செய்தார்.

இது சம்பந்தமாக நமது அம்மா நாளிதழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தலைவர் மீது நகைக்கடன் மற்றும் இதர விஷயங்களில் முறைகேடு செய்ததாக இயக்குனர்கள் அனைவரும் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்ததால் தேர்தல் திங்கட்கிழமை நடைபெறும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவித்திருந்தார்.

தேர்தல் நடைபெறும் நேரத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரை காவல் துறை பாதுகாப்பை மீறி இயக்குனர்களை மிரட்டி வாக்களிக்க விடாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். மேலும் தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சி மாவட்ட பொறுப்பாளரின் அழுத்தத்தினால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்து விட்டு கிளம்பி சென்று விட்டார்.

தலைவர் உட்பட இரண்டு இயக்குனர்கள் வெளியேறிய நிலையில் துணைத்தலைவர் ஆதரவுடன் 6 இயக்குனர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொத்தத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பெரும்பான்மையான இயக்குனர்கள் ஆதரவு இருந்தும் ஆளுங்கட்சி அதிகாரத்தால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு விட்டது.