எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் திட்டவட்டம்

ஈரோடு
திமுக ஆட்சியின் மின் கட்டண உயர்வால் மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். எனவே எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றியடைவது உறுதி என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க அரசை கண்டித்து ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் பவானி அந்தியூர் பிரிவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
கழக அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தனர். பவானி நகர கழக செயலாளர் எம்.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட கழகம் இன்று பொன்விழா கண்டுள்ளது. மக்களால் நான் மக்களுக்காக என வாழ்நாள் முழுவதும் மக்கள் நல திட்டங்களை வழங்கியவர் அம்மா. அம்மாவின் வழியில் எடப்பாடியார் ஆட்சியையும், கட்சியையும் கட்டி காத்தார். திமுக ஆட்சியின் விலைவாசி உயர்யால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
மின்வெட்டுடன் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. சொத்து வரி, வீட்டு வரி உயர்ந்துள்ளது. அடிப்படை வசதிகள் கூட இன்று நிறைலேற்றப்படுவதில்லை. அம்மா அரசின் நலத்திட்டங்களை திமுக அரசு தடுத்து நிறுத்துகிறது.
கழக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவி தொகைகளை திமுக அரசு நிறுத்தி உள்ளது. மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்குவதாக அறிவித்து மக்களை ஏமாற்றியது திமுக அரசு. தாலிக்கு தங்கம் திட்டம், மகளிருக்கு இரு சக்கர வாகன திட்டங்களை நிறுத்தி உள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இந்த ஆட்சியில் உள்ளது. திமுக ஆட்சியின் மின் கட்டண உயர்வால் மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றியடைவது உறுதி.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.