சிறப்பு செய்திகள்

படுகர் இனத்தை பழங்குடியினர் படடியலில் இணைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் கடிதம்

சென்னை

படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க உத்தரவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் என்ற இனம் மொழி சிறுபான்மை பழங்குடியின பிரிவில் உள்ளவர்கள். அவர்களுக்கு என்று தனி கலாசாரம் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் உள்ளது.

அவர்கள் தங்களுடைய இன மக்களுக்கு இடையேயும் மற்ற பழங்குடியினரிடமும் படுகு என்ற மொழியில் தொடர்பு கொள்கின்றனர். அந்த மலைவாழ் மக்களுக்கான கலாச்சாரத்தின் அடையாள மொழியாக படுகு மொழி விளங்கி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குண்டா, ஊட்டி, கொடநாடு போன்ற பெயர்கள் அனைத்தும் படுகு மொழியில் இருந்து மருவி வந்தவை தான். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் ஹிதய் ஹப்பா என்ற ஒரு வார கால பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

அவர்களின் அனைத்து பழக்க வழக்கங்களும் பழங்காலங்களில் வாழ்ந்த மலைவாழ் மக்களின் அம்சங்களை வெளிபடுத்தும் வகையில் உள்ளது.

இவர்கள் தொடக்க கால தனித்துவம் வாய்ந்த கலாச்சாரங்களை கொண்டவர்கள் என்று அவர்களை பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கிறது. அவர்களின் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருதி, படுகர் இனத்தை பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் இணைத்து அறிவிக்க வேண்டும் என்று கடந்த 5.9.2003 அன்று அப்போதிருந்த மத்திய அமைச்சருக்கு மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடிதம் எழுதினார். பின்னர் 28.7.2011 அன்று பிரதமருக்கு அதுகுறித்த நினைவூட்டல் கடிதத்தையும் அனுப்பியிருந்தார்.

1931-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி படுகர் இனம் பழங்குடியினம் என்று பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் சுதந்திரத்திற்கு றகு பழங்குடியினர் பட்டியலில் இருந்து அந்த இனம் நீக்கப்பட்டு விட்டது.

இதற்கான காரணம் தெரியவில்லை. எனவே தாங்கள் இதில் தலையிட்டு படுகர் இனத்தை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் இணைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.