தவறான சிகிச்சையால் இளம்பெண் சாவு; தனியார் மருத்துவமனைக்கு சீல்

சேலம்
எடப்பாடி அருகே தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையளிக்கப்பட்டதால் இளம்பெண் உயிரிழந்ததார். உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜலகண்டாபுரம் அருகேயுள்ள சவுரியூர் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பூபதி என்பவரின் மனைவி சங்கீதா (வயது 27) குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர் சங்கீதாவுக்கு முதலில் தவறான முறையில் சிகிச்சையளித்து விட்டதாகவும், பின்னர் அதனை சரி செய்வதற்காக அடுத்தடுத்து மூன்று முறை அறுவை சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜீரண கோளாறு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட சங்கீதா வயிற்றுப்பகுதி வீக்கமடைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவலறிந்த சங்கீதாவின் உறவினர்கள் ஆத்திரமடைந்து அந்த தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆத்திரத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தவறான சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனையை பூட்டி சீல் வைக்க வேண்டும் என கூறி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் எடப்பாடியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே சிகிச்சை குறித்து விபரம் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து எடப்பாடி வட்டாட்சியர், காவல்துறை, முன்னிலையில் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.