தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் ஆட்சியே இருந்திருக்கலாமே என்று பேசுகின்ற நிலை வந்து விட்டது -முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

சென்னை,

மக்களுக்கு ஸ்டாலின் மீதுள்ள நம்பிக்கை போய் விட்டது. எடப்பாடியார் ஆட்சியே இருந்திருக்கலாமே என்று பேசுகின்ற நிலை வந்து விட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.

தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் நடைபெற்ற பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியதாவது:-

கழகத்தை உயிரோட்டமாக வைத்திருக்கின்ற ஒரு அணி இந்த பேரவை. முன்னாள் அமைச்சர் உதயகுமார் குறித்து நாங்கள் பேசும் போது 24 மணி நேரம் இதே சிந்தனையாக இருப்பார் போல இருக்கிறதே. இந்த கூட்டத்தை இப்படி நடத்தலாமா, அந்த கூட்டத்தை அப்படி நடத்தலாமா என்று இதே சிந்தனையாகவே இருக்கிறாரே என்று பேசிக்கொள்வோம். இவரைப் பார்த்து நாமும் ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விடுகிறோம். இது ஒரு ஆரோக்கியமான போட்டி.

இவரை பார்த்து நமக்கும் சில நிகழ்ச்சியை நடத்த தோன்றுகிறது. இப்படி இந்த இயக்கம் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணமாக இருப்பார் முன்னாள் அமைச்சர் உதயகுமார். இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய கருத்தை தைரியமாக சொல்ல வேண்டும்.

நான் அம்மாவிடம் அப்போது பேரவை செயலாளர் பதவியை பெற்றேன். இன்றைக்கு கழகம் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளது. கழகம் எப்போதும் வெற்றிபெறும். இந்த இயக்கம் கடுமையான
தோல்வியை 1996ல் சந்தித்தது.

அம்மாவும் தோல்வி அடைந்தார். நாம் நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றோம். கட்சியிலிருந்த மூத்த தலைவர்கள் பலரும் சென்று விட்டார்கள்.

இரட்டை இலை சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று பலர் தெரிவித்தனர். அந்த நேரத்தில் கழகம் இருக்குமா, இருக்காதா, சின்னம் இருக்குமா, இருக்காதா என்ற நிலையில் அம்மாவை கைது செய்து விட்டார்கள்.

கருணாநிதி கணக்கு போட்டார். இத்தோடு கழகத்தை அழித்து விடலாம் என்று கணக்கு போட்டார். அந்த சமயத்தில் வேறு எந்த தலைவராக இருந்தாலும் சேர்ந்து போயிருப்பார்கள். அன்று அம்மா மட்டும் இல்லை என்றால் நிலைமை என்ன ஆகியிருக்கும். அம்மா மட்டும் தான் தைரியமாக இருந்தார்.

யார் போனாலும் சரி. நான் இருக்கிறேன். மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை உருவாக்குவேன் என்று சொன்னார்கள். அன்றைக்கு 2001-ல் நாம் வெற்றிபெற்று வந்தோம் என்றால் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பேரவையின் உழைப்பு. பல்வேறு அணிகளும் உழைத்தது. முக்கிய காரணமாக அமைந்தது பேரவையின் உழைப்பு தான்.

இது எல்லோருக்கும் தெரியும். கழகத்தில் இருப்பது போன்று பேரவையின் சார்பில் அனைத்து இடங்களிலும் கிளைகளிலும் கிளை செயலாளர்களை நியமித்தார். அன்றைய சூழ்நிலையில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது.

கழகமா, பேரவையா என்று இருந்தது. இப்படி போட்டிப்போட்டு கொண்டு கழக பணி செய்தோம். அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். கழகம் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் தான் எங்களிடம் இருந்தது. அன்றைக்கு கழகம் இனிமேல் இருக்காது என்பதை மாற்றி அமைத்தது அம்மாவின் பேரவை.

இந்த பேரவை மூலம் தான் நான் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக வந்தேன். எனவே உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரே இயக்கம் கழகம் மட்டும் தான். உங்களுடைய உழைப்பை கழகத்திற்கு அளியுங்கள்.

உங்களை தேடி பதவி நிச்சயமாக வரும். இது கழகத்தில் கண்டிப்பாக நடக்கும். 10 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகும் நம்மால் கூட்டணியோடு சேர்த்து 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நமக்கும் அவர்களுக்கும் 3 சதவீத வாக்குகள் தான் வித்தியாசம். 10 ஆண்டு காலத்திற்கு பிறகும் ஆட்சியை இழந்தாலும் இன்றைக்கு மக்கள் நம்மை யாரும் குறை சொல்லவில்லை.

இந்த ஓராண்டு காலத்தில் மக்கள் எடப்பாடியார் ஆட்சியே இருந்திருக்கலாமே என்று பேசுகின்ற நிலை வந்துவிட்டது. அந்த மக்களின் பேச்சை வளர வைக்கக்கூடிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

நம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் இன்றும் கடுமையாக உழைக்க வேண்டும். இது சோதனையான காலகட்டம். அன்றைக்கு அவர் ( கருணாநிதி) வழக்குகளை போட்டு அழித்துவிடலாம் என்று கணக்குப் போட்டார்.

அப்பாவை போல பிள்ளை ( ஸ்டாலின்) செய்து வருகிறார். ஆனால் நல்லவர் போல வேஷம் போடுகிறார். முகமூடியை மாட்டிக்கொள்கிறார். ஆனால் அவர் சாயம் மக்களிடம் வெளுத்துப்போய் விட்டது. ஒரு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுக் காலத்திற்குள்ளே இந்த அளவுக்கு ஒரு அவப்பெயரை பெற்ற, மக்கள் நம்பிக்கையை இழந்த ஒரு ஆட்சி, ஒரு முதலமைச்சர் தி.மு.க.வும், ஸ்டாலினும் தான்.

மக்களுக்கு ஸ்டாலின் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது. வேறு வழியில்லை 4 வருடம் இவர்கள் தான் இருப்பார்கள் என்று மக்கள் நினைத்து வருத்தப்படுகிறார்கள். உள்ளாட்சியில் யாரும் தி.மு.க.வுக்கு விருப்பப்பட்டு ஓட்டு போடவில்லை.

அவர்கள் மீது நம்பிக்கை வைத்து யாரும் வாக்கு போடவில்லை. நம் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை இல்லை. இன்னும் நம்மிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த இயக்கத்திற்கு நம்முடைய உழைப்பு தேவைப்படுகிறது.

அம்மா சொன்ன வார்த்தையை நாம் நிரூபிக்க வேண்டும் என்றால் உழைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை தோல்வி அடைய வைத்தால் தான், 2026 தேர்தல் களத்தில் சமமாக சந்திக்க முடியும்.

இந்த இயக்கம் பல்வேறு வழக்குகளை பார்த்திருக்கிறது. தி.மு.க.வினர் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, எத்தனை சிறைக்கு அனுப்பினாலும் சரி, அதனை பார்த்து அஞ்சுபவர்கள் கழகத்தினர் கிடையாது.

முதலில் நீங்கள் மன ரீதியாக நீங்கள் தயாராக வேண்டும். இந்தியாவிலேயே அதிக முறை ஆளும் கட்சியாக இருந்த இயக்கம் கழகம். அம்மாவுக்கு இந்த பேரவை எப்படி மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்ததோ அதுபோல சுறுசுறுப்பாக நீங்கள்
இயங்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.