தற்போதைய செய்திகள்

விடியா ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் திண்ணை பிரச்சாரம் அமைய வேண்டும்- கே.பி.அன்பழகன் வேண்டுகோள்

சென்னை

ஓராண்டில் மக்களுக்கு தி.மு.க அரசு எதையும் செய்யவில்லை. விடியா தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் கழக அம்மா பேரவையின் திண்ணை பிரச்சாரம் அமைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் நடைபெற்ற பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

இந்திய அளவில் அதிகமான மாணவிகள் சேர்க்கை தமிழகத்தில் தான் உள்ளது. உதாரணமாக பிஎச்டி எம்பில் போன்ற பட்டப் படிப்புகளில் மாணவிகள் தான் முதலிடத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மூன்று கிலோ மீட்டர் இடையே நடுநிலைப்பள்ளிகள், ஐந்து கிலோ மீட்டர் இடையே உயர்நிலைப்பள்ளிகள், எட்டு கிலோ மீட்டர் இடையே மேல்நிலைப்பள்ளிகளை உருவாக்கினார்.

மேலும் கிராமந்தோறும் இடைநிற்றலை தவிர்க்க 14 வகை கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள். அதுமட்டுமல்லாது அம்மா அரசை தலைமை தாங்கி வந்த எடப்பாடியார் நான்கு பொறியியல் கல்லூரிகள், 41 பல்கலை உறுப்பு கல்லூரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கினார்.

திமுக ஆட்சியில் புதிதாக நூறு பாடப்பிரிவு தான் உருவாக்கப் பட்டது. ஆனால் அம்மா ஆட்சி காலத்தில் புதிய 1066 பாடபிரிவுகள் உருவாக்கப்பட்டன. அதேபோல் 41 பல்கலை உறுப்பு கல்லூரிகளில் ரூ.8000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் இருந்தது.

ஆனால் அரசு கல்லூரியில் 800 முதல் 1000 வரை தான் கட்டணம் இருந்தது. எடப்பாடியார் பல்கலை உறுப்புகல்லூரிகளை அரசு கல்லூரியாக மாற்றி ஒரே கட்டணமாக அறிவித்தார். இதனால் தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை 51 சதவீதம் உயர்ந்தது.

ஆனால் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின் தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையை எடுத்துக்கொண்டால் அது 2020-ம் ஆண்டு நடைபெற்ற சர்வே ஆகும்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு கிடைக்க 7.5 இடஒதுக்கீட்டினை எடப்பாடியார் பெற்றுத்தந்தார் இதன் மூலம் 436 அரசு பள்ளி மாணவர்கள் இன்றைக்கு மருத்துவ படிப்பு பயன் பெற்று வருகின்றனர்

இன்றைக்கு தி.மு.க அரசு மக்களுக்கான திட்டம் எதுவும் செய்யவில்லை. மாறாக நாம் உருவாக்கிய திட்டங்கள் தான் திறந்து வைத்து வருகின்றனர். ஓராண்டில் மக்களுக்கு தி.மு.க அரசு எதையும் செய்யவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் கழக அம்மா பேரவையின் திண்ணை பிரச்சாரம் அமைய வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.