ஆந்திர மாநில சித்தூரில் ரூ.2.5 கோடி செம்மரக்கட்டை கடத்தல்-தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரின் கணவர் கைது

சென்னை
ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் கடத்திய சம்பவத்தில் தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து வேலூர் நோக்கி அடுத்தடுத்து 3 கார்கள், ஒரு லாரி ஆகியவை சென்றன. அவற்றை மடக்கி பிடித்த போலீசாரை கண்டதும் கார்களில் இருந்து சிலர் தப்பி ஓடினர். அவர்களில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் கார்களில் இருந்து 30 செம்மரக்கட்டைகளும், லாரியில் இருந்து 70 செம்மரக்கட்டைகளும் இருந்தன. இவற்றை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து செம்மரக்கட்டைகளையும், கார்களையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் 2 டன் எடை கொண்டவை. அதன் மதிப்பு ரூ.2.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கடத்தல் சம்பவத்தில் பிடிபட்ட இருவர் திருவண்ணாமலையை சேர்ந்த பெருமாள், ஆரணியை சேர்ந்த வேணு ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதில் பெருமாள் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தி.மு.க. ஒன்றியக்குழு தலைவராக இருக்கும் சாந்தி என்பவரின் கணவர் ஆவார்.
அதைத்தொடர்ந்து இருவரையும் சித்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்மரக்கட்டை கடத்தல் சம்பவத்தில் தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.