தற்போதைய செய்திகள்

2026-ல் மீண்டும் கழக ஆட்சி மலரும் – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

சென்னை

அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு எதிர்ப்பாக இருப்பதால் 2026-ல் மீண்டும் கழக ஆட்சி மலரும் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டமாக கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

இன்றைய தினம் ஒரு அணி சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்னால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எந்த அணிக்கு செயலாளராக இருக்கிறாரோ அந்த அணியாகத்தான் இருக்கும். அவர் மாணவரணியில் இருக்கின்ற காலத்தில் இருந்து நான் பார்த்து கொண்டிருக்கிறேன்.

அப்போது ஒவ்வொரு பகுதியிலும், வீடு வீடாக சென்று அம்மாவினுடைய சாதனைகளை நோட்டீசாக கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய மாவட்டத்திற்கு வந்தார். இதைப்பார்த்த அம்மா அவர்கள் இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. அதன்பின்னர் பேரவை செயலாளரானார்.

கழகத்தில் மாவட்ட கழக செயலாளருக்கு அடுத்தது எந்த பொறுப்பு என்று சொன்னால் எல்லோரும் எதிர்பார்ப்பது அம்மா பேரவை செயலாளர் தான். அந்த பேரவையின் சார்பில், மாபெரும் சைக்கிள் பேரணி நடத்தினார். உழைப்பு என்று சொன்னால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான்.

உளப்பூர்வமாக, உணர்வோடு இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும், இந்த இயக்கம் நன்றாக வளர வேண்டும், இந்த இயக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக உண்மையாக உழைத்தவர் என்று சொன்னால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேரவையில் உள்ளவர்கள் மூன்று பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் செ.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். மேலும் இதில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர். எனவே கழகத்தில் எந்த பொறுப்பில் இருந்தாலும் நாம் அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்ற வேண்டும்.

நான் கூட முதலில் கிளைக்கழக பிரதிநிதியாகவும், கிளை செயலாளராகவும், ஒன்றிய கழக பேரவை செயலாளராகவும், ஒன்றிய கழக செயலாளராகவும் இருந்தேன், பின்னர் மாவட்ட கழக செயலாளர் ஆனேன். கழகத்தில் எந்த பொறுப்பில் இருந்தாலும் உண்மையாக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். கழகத்தில் மட்டும் தான் தொண்டர்களும் எந்த பொறுப்புக்கும் வரலாம் என்ற வரலாறு உண்டு.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் வழிகாட்டியாக இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் சாதாரண சிலுவம்பாளையம் கிளை செயலாளராக இருந்து இன்று தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே ஒரு சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெறுகின்ற அளவிற்கு நிர்வாகத்தை கொடுத்து அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பாராட்டு பெற்றுள்ளார்.

கழகம் 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தபோது ஆட்சி பணியையும், கட்சி பணியையும் பார்த்தோமே தவிர, எதிர்க்கட்சியை ஒழிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கவில்லை. ஆனால் இன்றைய தினம் தி.மு.க. மக்களை பார்க்கவில்லை, கழகத்தை ஒழிக்க வேண்டும்,

கழகத்தில் யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்கள் மீது வழக்கு போட வேண்டும், கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு, பேரவையில் உள்ளவர்கள், கழக முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்கு போடுகிறார்கள். எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி இந்த இயக்கத்தில் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் மற்றும் கழகத்தினர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். கழகத்தில் உண்மையாக உழைப்பவர்கள் யார், யாரெல்லாம் இருக்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பை பெறுவார்கள். அனைத்து தரப்பு மக்களும் எப்பொழுது தி.மு.க. ஆட்சி போகும், எடப்பாடியார் ஆட்சி அமைப்பார் என்று நினைக்கும் அளவிற்கு உள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்ய வேண்டும். மீண்டும் 2026-ல் அம்மாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும். மாவட்ட பேரவை செயலாளர்கள் ஒவ்வொரு ஒன்றியமாக நேரடியாக சென்று இளைஞர்களையும், பணியாற்றுபவர்களையும் தேர்ந்தெடுத்து பொறுப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு சார்பு அணியிலும் ஒவ்வொருவரும் சிறப்பாக பணியாற்றினால் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும்.

நாடாளுமன்ற தேர்தல் எப்பொழுது வரும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் தி.மு.க.வினர் என்னென்ன பொய் வாக்குறுதிகளை கொடுத்து வந்துள்ளனர்.

கழக ஆட்சியின்போது என்னென்ன திட்டங்களை நிறைவேற்றினோம் என்று பேரவை நிர்வாகிகள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். கழக ஆட்சியின் போது கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கியது போன்றவைகளையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.