தற்போதைய செய்திகள்

அந்தியூர் தொகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டங்கள் – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

ஈரோடு

அந்தியூர் தொகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு புறநகர் மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பொலவக்காளி பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொலவக்காளிபாளையம் ஊராட்சி கழக செயலாளர் பி.வி.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

கோபி ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன் வரவேற்புரையாற்றினார். இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், தலைமைக் கழக பேச்சாளர் கவிஞர் இளைய கவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து அம்மாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமை சேர்த்துள்ளார். அதேபோல் விவசாயிகளுக்காக காவேரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். சேலம் தலைவாசலில் 1000 ஏக்கர் பரப்பளவில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் போல் கால்நடைகளுக்காக 1962 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ் வசதியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

அந்தியூர் தொகுதியில் மணியாச்சி திட்டம், வேதபாறை அணைத்திட்டம் என குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திட்டங்களை வகுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை தூர் வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் தமிழக முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு குடிநீர் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்திவரும் கழக அரசை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஸ்டாலினுக்கு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் கூறியது போல கழக அரசு 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.