தற்போதைய செய்திகள் மற்றவை

தி.மு.க. அரசு மீது மக்களுக்கு துளியும் நம்பிக்கை கிடையாது-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை, ஜூலை 20-

ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்திலேயே இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த அரசாக திமுக அரசு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டி பேசினார்

மதுரை மாநகரில் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வினர் 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அந்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் ஆட்சி அமைத்து 75 நாட்கள் ஆகியும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், அதற்கு எங்களுக்கு வழி தெரியும் என்று கூறினர்.

ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருங்கள், நீட் தேர்வு எழுதினால் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்று அமைச்சர் கூறுகிறார். அதுமட்டுமல்லாது கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். இதுபற்றி ஆளுநர் உரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மாணவர்கள், இளைஞர்களிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்கள் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. இன்றைக்கு இரண்டே மாதத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி உள்ளது. இதனால் தி.மு.க. அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தி.மு.க. அரசு வாக்குறுதியை நிறைவேற்றும் என்று மக்களிடம் துளியும் நம்பிக்கை கிடையாது.

இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறினார்கள். ஆனால் பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

கழகம் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாத சூழ்நிலை நிச்சயம் உருவாகும். ஆகவே இளைஞரணி நிர்வாகிகளாகிய நீங்கள் நாம் செய்த சாதனை திட்டங்களையும், திமுகவினர் செய்யும் அராஜகங்களையும் மக்களுக்கு எடுத்துக்கூறி கழகத்தின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலைராஜா, கழக இளைஞரணி இணை செயலாளர் எஸ்.எம்.ரபீக், கழக மாணவர் அணி இணை செயலாளர் குமார், மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் தவசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.