விடியா தி.மு.க. ஆட்சியின் மின்வாரியம் அலட்சியம்-பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

விழுப்புரம்,
விழுப்புரத்தில் சேதமடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்து முதியவர் பலியானதோடு, மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு விடியா தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ளது ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில். இக்கோவிலின் வாசலில் தினமும் ஆதரவற்றவர்கள் 10-க்கும் மேற்ப்பட்டவர்கள் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கோவில் வாசலில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 52), கடலூர் முதுநகரை சேர்ந்த ராமலிங்கம் (வயது70) ஆகியோர் படுத்து உறங்கியுள்ளனர்.
அப்போது கோவில் அருகில் சேதமடைந்திருந்த மின்கம்பம் திடீரென முறிந்து விழுந்துள்ளது. இதில் அப்போது அங்கு படுத்து தூங்கிக்கொண்டிருந்த கணேசன் என்ற முதியவரின் மார்பு மீதும், ராமலிங்கம் என்பவரின் கால்கள் மீதும் விழுந்தது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ராமலிங்கத்துக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இதேபோல் மற்றொருவரும் காயமடைந்தார்.
மின்கம்பம் முறிந்து விழுந்த சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினர். இச்சம்பவம் தொடர்பாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்த கணேசனின் உடலை மீட்டும், கால் முறிவு ஏற்பட்ட ராமலிங்கத்தையும், மேலும் காயமடைந்த 40 வயது மதிக்கதக்க ஒருவரையும் மீட்டும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கம்பம் முறிந்து விழுந்து சம்பவம் குறித்து நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் வாரியத்தின் அலட்சியத்தால் மின்கம்பம் முறிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்கம்பம் முறிந்து விழுந்த இடத்திற்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் மின் கம்பம் அகற்றப்படாமல் சாலையிலேயே நீண்ட நேரம் கிடந்தது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் நேற்று காலை 10 மணிக்கு மின்வாரிய துறை அதிகாரிகளும், ஊழியர்களும் வந்து மின் கம்பத்தை அகற்றினர். விடியா தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் அலட்சியமே இச்சம்பவத்துக்கு காரணம் என்று பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி உள்ளனர்.