தற்போதைய செய்திகள் மற்றவை

அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

கடலூர்

பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் தமிழகம் தொழில் வளர்ச்சி பெற உள்கட்டமைப்பு வசதியான பசுமை பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைக்காமல் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் கடலூர் பாதிரிகுப்பத்தில் உள்ள கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரத பிரதமர் தமிழகத்திற்கு வந்த தினம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். தமிழகத்தின் தொழில் புரட்சியை மேலும் விரிவுபடுத்திய, உள்கட்டமைப்பை மேம்படுத்திய நாளாக அமைந்தது. சென்னை-பெங்களூரு இடையேயும், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் தொழில் பெரு வழித்தடம் நான்கு வழி விரைவுச்சாலை அமைக்க 14,782 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டப்பட்டதும்,

தருமபுரி- பெங்களூரு இடையே நான்கு வழி விரைவுச் சாலை அமைக்க 3,871 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டப்பட்டதும், தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்களுக்கும். தொழில் முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக அமைந்தது. இதனால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மென்மேலும் பெருகும் என்பதில் ஐயமில்லை.

மேலும் 911 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டப்பட்ட திருவள்ளூர் முதல் பெங்களூர் வரையிலான இயற்கை எல்.என்.ஜி., டெர்மினல் எரிவாயு பைப்லைன் புதைக்கும் திட்டம், எண்ணுார் செங்கல்பட்டு இடையே 846 கோடி ரூபாயில் எரிவாயு பைப் லைன் புதைக்கும் திட்டம் ஆகியவை தமிழக தொழில் நிறுவனங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமான திட்டமாகும்.

இப்போது லிக்னைட் பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் தொழிற்சாலைகளால் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகமாகிறது. எல்.என்.ஜி., எரிவாயு பைப்லைன் புதைக்கும் திட்டம் முடிந்து அந்த பைப்லைன் மூலம் கேஸ் பிடித்து தொழிற்சாலைகள் இயங்கினால் அதன் உற்பத்தி செலவு 20 முதல் 30 சதவீதம் வரை குறைய கூடிய மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடில் 1428 கோடி ரூபாய்க்கு பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய நிகழ்வு தமிழகத்தில் தொழில்துறைக்கு மிகப்பெரிய மைல் கல்லாகும். எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அமைப்பு சென்னைக்கு உண்டு. மூன்று கடல் துறைமுகங்களை சென்னையில் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் பிரதமர் தமிழகத்தில் கலந்துகொண்ட விழாவில் தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தகூடிய எந்த கோரிக்கையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் ஏன் முன்வைக்கவில்லை? பிரதமரிடம் சென்னையில் புதிய பன்னாட்டு பசுமை விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் முன் வைக்க தவற விட்டுவிட்டார்.

புதிய பசுமை பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி சொல்லி இருந்தால் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு வழக்கமான கோரிக்கைகளான நீட் தேர்வு ரத்து, ஜி.எஸ்.டி., நிலுவைத்தொகை என்ற அரைத்த மாவையே இங்கேயும் அரைத்துள்ளார்.

பிரதமர் தமிழகம் வந்தது தொடங்கி வைத்த திட்டங்கள் தமிழகம் வளர்ச்சிக்கும், தனி நபர் பொருளாதார வளர்ச்சிக்கும், ஜி.டி.பி. வளர்ச்சிக்கும் உகந்ததாக விளங்குகிறது. ஆந்திரா, சென்னை, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் விரைவு சாலை தொழில் முதலீட்டாளர்கள் நீண்டநாள் கண்ட கனவாகும். அதை நிறைவேற்றி தந்தவர் பிரதமர்.

தப்போது அடிக்கல் நாட்டிய திட்டங்களால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் தொழில்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதை அடிப்படையாகக் கொண்டு புதிய பன்னாட்டு விமான நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம், தமிழக முதல்வர் வைப்பார் என்று எதிர்பார்த்திருந்த தொழில் முதலீட்டாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ்மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தொன்மை வாய்ந்த தமிழ்மொழி சிறக்க செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய அரசு முழு நிதி ஒதுக்கி அமைத்து கொடுத்துள்ளது. அதில் கருத்தரங்கு கூடங்கள், மிகப்பெரிய நுாலகம் மின்னணு புத்தகங்கள் என பல வசதிகளை மத்திய அரசு செய்ய உள்ளது.

இது போன்ற சூழ்நிலைகளில் பிரதமர் தமிழகத்தில் கலந்துகொண்ட நிகழ்வில் தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி பற்றி பேசாமல் வேறு ஏதேதோ பேசியது அந்த நிகழ்ச்சிக்கு உகந்ததா என்று தமிழக முதல்வர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று பேசும் முதலமைச்சர், தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பன்னாட்டு பசுமை விமான நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் பாரத பிரதமரிடம் முன் வைக்கவில்லை என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புதிய பசுமை பன்னாட்டு விமான நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்காதது தமிழக மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.