மக்களுக்கு நல்லாட்சி அளித்த ஆட்சி கழக ஆட்சி-கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா பேச்சு

சென்னை,
தி.மு.க.வின் திராவிட மாடல் ஒரு திருட்டு மாடல் என்பது மக்களுக்கு புரிந்து விட்டது. மக்களுக்கு நல்லாட்சி அளித்த ஆட்சி கழக ஆட்சி, அது தான் உண்மையில் மக்களாட்சி என்று கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா கூறி உள்ளார்.
தலைமை கழக அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், கழக நட்சத்திர பேச்சாளருமான விந்தியா பேசியதாவது:-
நான் அரசியலில் இருப்பது அதிகாரத்திற்காகவே, ஆதாயத்திற்காகவே இல்லை. என்னுடைய அடையாளத்திற்காகவும், விசுவாசத்திற்காகவும் இருக்கிறேன். நான் சினிமாவை விட்டு 14 வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்றைக்கு மக்கள் என் மீது பாசத்தோடு இருக்கிறார்கள்.
மரியாதையோடு இருக்கிறார்கள். இதற்கு காரணம் அம்மா எனக்கு அளித்த அடையாளம். கழகம் என்ற முகவரியை அளித்தது அம்மா. கழகமும் அதன் மூலம் கிடைக்கும் மரியாதையும் தான் என்றுடைய வாழ்க்கை. எனக்கு இவ்வளவு அழகான வாழ்க்கையையும், குடும்பத்தையும் அளித்த அம்மா அவர்களை மனதில் நிறுத்தி வணங்குகிறேன்.
ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தால் போதும் கட்சியை ஆரம்பித்து விடலாம் என்ற மோசமான நிலைமை தான் இன்றைக்கு தமிழகத்தில் இருக்கிறது. ஆனால் கழகம் என்ற மிகப்பெரிய இயக்கத்தை ஆரம்பித்து 50 வருடம் ஆகின்றது. லட்சக்கணக்கான தொண்டர்களுடன் கட்சியை ஆரம்பித்து இன்றைக்கு கோடிக்கணக்காக தொண்டர்களை கொண்ட இயக்கமாக கழகம் உள்ளது.
கழகத்தின் 50 ஆண்டு கால வரலாற்றில் 32 வருடம் ஆளும் கட்சியாகவே இருந்துள்ளோம். இதை விட பெரிய பெருமை வேறு என்ன வேண்டும். நான் கழகத்தை சேர்ந்தவர் என்று கவுரமாக சொல்லி கொண்டு செல்லலாம். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 1 வருடம் தான் ஆகிறது. தி.மு.க.வின் திராவிட மாடல் ஒரு திருட்டு மாடல் என்பது மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது.
இதனை இன்னும் தெளிவாக மக்களுக்கு புரிய வைக்கவேண்டிய பொறுப்பில் நாம் இருக்கின்றோம். விடியல் வரும் என்று நினைத்து ஓட்டு போட்ட மக்களுக்கு விளம்பரம் மட்டும் தான் வந்து கொண்டிருக்கிறது. சிக்ஸர் ஆட்சியாம். சூப்பர் ஆட்சியாம். இரண்டாம் கலைஞர் ஆட்சியாம். திராவிட மாடல் ஆட்சியாம். இப்படி விளம்பரத்தை நம்பியே ஆட்சியை நடத்துகின்ற ஒரே கட்சி, ஒரே ஆட்சி திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி.
பொதுவாக மாடல் என்றால் என்ன. தமிழிலில் சொல்ல வேண்டும் என்றால் போலி. நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து கட்டுநரிடம் சென்றால் அவர் ஒரு மாதிரி வீட்டை காண்பிப்பார். அதில் நீங்கள் வாழ முடியாது. வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். ஏன் என்றால் அது ஒரு டம்மி துண்டு. அது விளம்பரத்திற்காக.
அப்படி ஒரு டம்மி ஆட்சி தான் இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதுதான் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி. ஆட்சி என்றால் அது மாதிரியாக இருக்கக்கூடாது. மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். அப்படி ரோல் மாடலாக இருந்த ஆட்சி தான் கடந்த 10 வருட கழக ஆட்சி. அம்மா ஆட்சி. எடப்பாடியார் ஆட்சி.
எத்தனை பிரச்சனை இருந்தது. மழை வந்தாலும், கொரோனா வந்தாலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு. சாப்பிட உணவு, தங்குமிடம். செலவுக்கு நிதி என்று மக்களை பாதுகாப்பாக பார்த்துக்கொண்டு மக்களுக்கு நல்லாட்சி அளித்த ஆட்சி கழக ஆட்சி. அதுதான் உண்மையில் மக்களாட்சி.
தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் மக்களுக்கு திராவிட மாதிரி என்றாலே கல்லை தூக்கிக்கொண்டு அடிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள். நமக்கு வெற்றி கிடைக்க தேவைப்படுவது பொறுப்பு, உழைப்பு, ஒற்றுமை. இதில் எது குறைந்தாலும் நம்மால் வெற்றிபெற முடியாது. எதிரி நம்மை மிக எளிதாக ஜெயித்து விடுவார்கள்.
தோல்வி அடைந்து விட்டேன் என்று ஒத்துக்கொள்வதில் தவறு கிடையாது. ஆனால் நான் துவண்டு விட்டேன் என ஒத்துக்கொள்ளக்கூடாது. வாழ்க்கையில் நாம் வெற்றிபெற வேண்டும் என்றால் ஓட வேண்டும். இல்லை என்றால் நின்று விட வேண்டும்.
ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடவேண்டும். நிற்பதாக இருந்தால் எதிர்த்து நிற்கவேண்டும். நான் பல விஷயங்களை எதிர்த்து நின்ற காரணத்தினால் தான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். இந்த கழகத்தில் இந்த இடத்திற்கு நான் வந்துள்ளேன் என்றால் அது என்னுடைய சினிமா கவர்ச்சி இல்லை. 16 வருட உழைப்பு. 16 வருடம் கழகத்திற்காகவே வாழ்கிறேன்.
இதுதான் என்னுடைய வாழ்க்கை. அம்மா மீது உள்ள விசுவாசம், புரட்சித்தலைவர் மீது உள்ள அன்பு. கட்சி மீது இருக்கும் பற்று. என் குடும்பமாக இருக்கும் நீங்கள். என் மீது இருக்கும் தன்னம்பிக்கை. எது குறைந்திருந்தாலும் இந்த இடத்தில் மரியாதையும் நின்று இருக்க முடியாது.
கழகத்தினர் தி.மு.க.வினருக்கு எந்த வகையிலும் குறைந்தவர்களே கிடையாது. திமுகவினரை விட கழகத்தினர் தைரியமானவர்கள். நல்லவர்கள். மனசாட்சி உள்ளவர்கள். மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். தோல்வியை கண்டு நாம் பயப்படாத வகையில் தோல்வி நம்மை நெருங்காது.
நாம் தோற்றதை விட வெற்றி பெற்றதுதான் அதிகம். இதுதான் வரலாறு. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டு இன்றைக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் நம்மைப் பார்த்து கேலி, கிண்டல் செய்கிறார்கள்.
நாம் பேசுகின்ற நல்ல விஷயங்கள் சபைக்கு வருவதில்லை. வெளிச்சத்திற்கு வருவதில்லை. செய்தியாக வருவதில்லை. ஊடகங்களும், அதிகாரிகளும் நமக்கு நிச்சயமாக துணைக்கு நிற்க மாட்டார்கள். இதுபோன்ற நிலைமையில் தான் நாம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
நாம் செய்த சாதனைகளை மனதில் நிறுத்தி கழகத்தினர் அரசியல் செய்தால் திராவிட மாடல் ஆட்சி எவ்வளவு பொய்யானது என்று மக்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கலாம்.
அம்பானி, அதானியை கார்ப்பரேட் நிறுவனம் என்று திராவிட மாடல் ஆட்சி சொல்கிறது. ஆனால் கலாநிதி, தயாநிதி, உதயநிதி, சபரீசன், ஜெகத்ரட்சகன், வைகுண்ட ராஜன் எல்லாம் ஏழை விவசாயிகள், குடிசை தொழில் செய்பவர்கள் என்று பேசுவார்கள்.
இதுதான் திராவிட மாடல் ஆட்சி. முதலாளி வந்தால் கொடி பிடிப்பான். தொழிலாளி வந்தால் தடி எடுப்பான். இதுதான் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி. ஓடாத பேருந்துக்கு இலவச பயணம். ஓடும் ஆம்புலன்சுக்கு விலை ஏற்றி விடுவார்கள். இதனை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவர்கள்.
இது தான் திராவிட மாடல் ஆட்சி. நமது ஆட்சியில் கட் அவுட் விழுந்து விபத்து நடந்தால், கும்பி எரிகிறது, குடல் வேகிறது என்று ஒப்பாரி வைப்பார்கள். அவர்களுடைய ஆட்சியில் கட் அவுட் விழுந்து அந்த நபர் மரணமடைந்தாலும் விபத்துக்கு வருந்துகிறோம் என்று சிறியதாக ஒரு அறிக்கை விடுவார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
நீட்டை அவர்களே கொண்டு வருவார்கள். நீட்டை ஒழிப்போம் என்று பேசுவார்கள். பிறகு அப்படி நாங்கள் பேசவே இல்லை என்று சொல்வார்கள். இப்படி மாற்றி, மாற்றிப் பேசி, டிசைன், டிசைனாக பேசுவது தான் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி. நமது ஆட்சியில் லாக்அப் டெத் நடத்தால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.
போராட்டம் செய்வார்கள். இவர்கள் ஆட்சியில் இப்படி நடந்தால் கைதியின் கவனக்குறைவு என்று கூறி இறந்தவர் மீது பழியை போடுவார்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா.
விடியல் தருவதற்கு விளக்கு ஏற்ற வேண்டாம். விளக்கு எரிவதற்கு மின்சாரம் தந்தால் போதும். விக் வைத்த காரணத்தினால் பவர் ஸ்டார் என்று நினைக்கிறார் ஸ்டாலின். இவர் உண்மையில் பவர் கட் ஸ்டாலின்.
ஸ்டாலின் பவர் மட்டுமா கட் செய்துள்ளார். மக்களுக்கு சென்று கொண்டிருந்த பல திட்டங்களையும் கட் செய்துள்ளார். திருமண உதவி திட்டம், தாலிக்குத்தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், சைக்கிள் திட்டம், விலையில்லா ஆடு, மாடு திட்டம், மினி கிளினிக் திட்டம், அம்மா சிமெண்ட் திட்டம், அம்மா உணவகம் திட்டம் இதுபோன்ற அனைத்து நல்ல திட்டங்களையும் திட்டம் போட்டு..
ரத்து செய்து மக்களை ஏமாற்றும் திருடர்கள் கும்பல் தான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியை நடத்துகிறார்கள். நீங்கள் மக்களிடத்தில் நன்றாக எடுத்து சொல்லுங்கள். வீட்டிற்கு வரும் திருடர்களைக் கூட நம்பலாம்.
ஆனால் தி.மு.க.வினரை நம்பக்கூடாது என்று. நாம் வெற்றி பெறுவது புதியது கிடையாது. வெற்றி பெறுவது நடைக்கு கஷ்டமும் கிடையாது. நம்புங்கள். கழகம் நமதே. கடமை நமதே. நாளை நமதே. எந்த நாளும் நமதே.
இவ்வாறு கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், கழக நட்சத்திர பேச்சாளருமான விந்தியா பேசினார்.