தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று செயல் படுவோம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சூளுரை

சென்னை,

தி.மு.க. அரசின் அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று செயல்படுவோம் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சூளுரைத்துள்ளார்.

தலைமை கழக அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் பேரவை மாவட்ட கழக செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

கழக பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமாரை பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பொதுவாக ஒரு விஷயத்தில் திறமை இருந்தால் மற்றொரு விஷயத்தில் திறமை இருக்காது. ஆனால் இரு விஷயத்திலும் திறமை மிக்கவர் ஆர்.பி.உதயகுமார். சிறந்த ஒரு அமைப்பை நிர்வகிக்கும் திறன் உள்ளவர். அதாவது ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்பதில் உங்களுக்கெல்லாம் ஒரு ரோல் மாடலாக உள்ளவர் தம்பி ஆர்.பி.உதயகுமார்.

அதேபோல் நிர்வகிக்கும் திறன் உள்ளவர்களுக்கு பேச்சுத்திறமை என்பது சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் அதிலும் 100 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் என்றால் அது நமது தம்பி ஆர்.பி.உதயகுமார் தான். மாணவர் அணி செயலாளராக இதயதெய்வம் அம்மா அவர்கள் என்னை நியமித்த போது, நான் உதயகுமாருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.

பா.வளர்மதி அவர்கள் சொன்னது போல் திறமை இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும். It is better to be faithful than famous. “புகழ் பெற்றவர் என்பதை விட ஒரு விசுவாசமிக்கவராக இரு” கழகத்திற்கு என்றைக்குமே விசுவாசமாக இருந்தால் உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

இங்கு இருக்கும் அனைத்து நிர்வாகிகளும் மிட்டா மிராசுதாரர்கள் அல்ல ஜமீன்தாரர்களும் அல்ல. சாதாரண கிளை கழகத்திலிருந்து உச்ச நிலையை அடைந்தவர்கள். அதேபோல் இதயதெய்வம் அம்மா அவர்களின் காலத்திலும் சரி இன்றைக்கும் சரி நமது கழகத்தில் உள்ள அணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது புரட்சித்தலைவி அம்மா பேரவைக்குத்தான்.

அப்படி முக்கியத்துவம் கொடுக்கின்ற இந்த அணிக்கு நாம் நம்முடைய கடமையை சரிவர செய்தாக வேண்டும். கடமை என்பது என்ன “உன் மகனை சரியாக பார்த்துக்கொள். ஏற்ற இறக்கங்களை இறைவன் பார்த்துக்கொள்வான்” என்பதுபோல் ஏற்ற இறக்கங்களை கட்சி பார்த்துக்கொள்ளும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா ஆகியோர் தீய சக்தி கருணாநிதியின் குடும்பமெல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடாது என்பதில் எள்ளளவும் பின் வாங்காமல் எவ்வாறு உறுதியாக இருந்தார்களோ அதேபோல் தான் கழகத்தில் இருக்கும் அனைவருக்கும் அந்த ரத்த உணர்வு இருக்க வேண்டும்.

இன்றைக்கு தமிழ்நாட்டின் நிலை என்ன? 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆனால் ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. மகளிருக்கு 1000 ரூபாய் கொடுக்கவில்லை, சிலிண்டருக்கு மானியம் இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, தினமும் கொலை கொள்ளைகள், கூட்டுக்கொள்ளை, பாலியல் பலாத்காரம் என அரங்கேறுகின்றன.

பி.ஜே.பி. கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். இதனை யார் எடுத்துச் சொல்வது? இது யாருடைய கடமை? ஒரு ஊடகம் கூட இதனை எடுத்துக் கூறுவதில்லை.

நம்முடைய பேச்சுகள் வெளியே வருவதில்லை. இத்தகைய ஊடகங்களை விட பலம் வாய்ந்தது எதுவென்றால் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா பேரவை தான். இன்றைக்கு ஏதோ நாம் கூடினோம், கலைந்தோம் என்றிருக்க கூடாது.

உண்மையில் நம்மை போன்ற ஆயுதம் உலகத்தில் நிச்சயம் கிடையாது. நமது கட்சியில் 75 மாவட்டங்கள் உள்ளன. ஒன்றியம், நகரம் என்று பல்வேறு அமைப்புகளுடன் நாம் ஒன்று கூடி திண்ணை பிரச்சாரம், தெருமுனை கூட்டங்கள் என நடத்தி தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துக் கூற வேண்டும்.

தி.மு.க. அரசு ஒரு விளம்பரமாகவே தான் செயல்படுகிறது. எதை எடுத்தாலும் அதில் விளம்பரம் என்ற நிலையில் தான் இருக்கிறது. தேர்தலில் தி.மு.க. தப்பித்தோம் பிழைத்தோம் என்ற நிலையில் தான் ஆட்சியை பிடித்திருக்கிறது. குறிப்பாக நமக்கும் தி.மு.க.வுக்கும் 3 சதவீதம் தான் வாக்கு வித்தியாசம். கிட்டத்தட்ட 12, 14 லட்சம் வாக்குகள் வித்தியாசம் தான்.

அதிலும் குறிப்பாக பல்வேறு தொகுதிகளில் ஆயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரம் என சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் நாம் தேர்தலில் இன்றைக்கு ஒரு கோடியே 46 லட்சம் வாக்குகள் பெற்று ஒரு அசைக்க முடியாத சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் விளங்குகின்றது.

இந்த 3 சதவீதத்தை விட நாம் 10 சதவீதம் அதிகமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் பெற வேண்டும். இந்த அரசு மீது அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர்.

பொன்னையன் குறிப்பிட்டது போல் மக்கள் மத்தியில் சுலபமாக சென்றடையக்கூடிய சோஷியல் மீடியாக்களை பயன்படுத்தி தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துச்சொல்ல வேண்டும். கழக நிர்வாகிகள் குறிப்பிட்டது போல கொடி கட்டிய ஒரு சாதாரண தொண்டன் கூட, கொடி கட்டிய காரில் வர முடியும் என்றால் அது கழகத்தில் மட்டுமே சாத்தியம். இங்கு ஜமீன்தார் வாரிசு கிடையாது.

புரட்சித்தலைவரின் எண்ணப்படி “உழைப்பவரே உயர்ந்தவர்” என்ற அடிப்படையில் தான் இந்த இயக்கம் செயல்படுகிறது. உதாரணத்திற்கு புரட்சித்தலைவர் காலத்தில் 1986-ம் ஆண்டு நான் தொகுயின் எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவராக நான் இருந்தேன். அதன் பிறகு தொகுதியின் தலைவராக உயர்ந்தேன்.

அதன்பிறகு 3 முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட்டு கேட்டேன். ஆனால் ராயபுரம் கூட்டணிக்கு சென்றுவிட்டது. அதன்பிறகு 91-ம் ஆண்டு இதயதெய்வம் அம்மா அவர்கள் எனது பணியினை பார்த்து தேர்தலில் சீட் வழங்கினார்கள். வெற்றி பெற்றேன். ஆனால் அமைச்சராக பதவி கிடைக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

வனத்துறை, கால்நடை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, மிகவும் பிற்பட்டோர் நலத்துறை என பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் ஆனேன். அப்போது எனக்கு 31 வயது தான்.

அந்த நேரத்தில் நாவலர் உட்பட பல மூத்த நிர்வாகிகளுடன் நான் பழகியிருக்கிறேன். அவர்களின் அறிவுரைகளை பெற்றியிருக்கிறேன். அதேபோல் மின்சாரம், சட்டத்துறை, நிதித்துறை என பல துறைகளின் அமைச்சராக பணியாற்றினேன். மேலும் இதயதெய்வம் அம்மா அவர்களின் அருளாசியுடன் பேரவை தலைவராகவும் பணியாற்றினேன்.

அதேபோல் கட்சியில் கழக தலைமை நிலைய செயலாளர், மாணவர் அணி செயலாளர், மீனவர் பிரிவு செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தேன். அதேபோல் இதயதெய்வம் அம்மா அவர்களின் காலத்தில் சென்னையில் மாவட்ட கழக செயலாளராக பணியாற்றினேன். 8 தொகுதிகளில் 7 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தேன்.

நாம் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம், நம்மிடையே ஆற்றல், அறிவு நிறைந்திருக்கிறது. எதிர்த்து நிற்கும் ஆற்றலும் நம்மிடையே நிறைந்துள்ளது. என் மீது 4 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஒரு ரவுடி அனைத்து வாக்குசாவடிகளுக்கும் சென்று அராஜகம் செய்கிறான் என்ற தகவல் மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் எனக்கு கழகத்தினர் மூலம் தகவல் கிடைக்கின்றது. ஒரு ரவுடி எப்படியும் ஆயுதம் வைத்திருப்பான்.

எனவே அவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தோம். அவனுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை. இருந்தாலும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று 10 நாட்களாக பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

ஆனால் இங்கு நான் சிறையில் களி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவும் பூந்தமல்லியில் தீவிரவாதிகளை அடைக்கக் கூடிய சிறையில் அடைக்கப்பட்டு தரையில் படுக்க வைக்கப்பட்டேன். எனக்கு எந்த சலுகையும் தரக்கூடாது என்ற உத்தரவு. நான் 7 முறை சிறை சென்றவன்.

ஆகையால் இதெல்லாம் ஒன்றும் எனக்கு பெரியதல்ல. என் மீது 4 பொய் வழக்குகள் கிட்டத்தட்ட 20 பிரிவுகளில் போடப்பட்டுள்ளது. இன்றைக்கும் கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திடுகிறேன். இது சம்மந்தமாக சட்டப்படி . புகார் அளித்துள்ளேன். அவர்களும் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஜனாதிபதிக்கும் புகார் அளித்துள்ளேன். அதன் விளைவாக இன்றைக்கு “அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்ற தவலை அவருக்கு தெரிவிக்க வேண்டும்” என்ற கடிதம் அனுப்பட்டுள்ளது.

நிலம் அபகரிப்பில் 99 சதவீதம் பேர் தி.மு.க.வினர் தான் உள்ளனர். ஆனால் எனது மருகன் மற்றும் அவருடைய அண்ணன் ஆகிய இருவருக்கும் ஒரு நிறுவனம் தொடர்பான பிரச்சினையில் நடைபெறும் சிவில் வழக்கில் என்னையும் அதில் சேர்த்து 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.

ஆகவே தி.மு.க. அரசின் அவலங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எது வந்தாலும் போராட வேண்டும். அம்மா பேரவை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாளை நமதே. நாற்பதும் நமதே.. என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி நமக்கும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.