காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் புரட்சித்தலைவி உருவப்படம் அகற்றம்-அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க.வினர் அராஜகம்

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் வைக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத தி.மு.க வட்ட செயலாளர்கள் அகற்றினர். தி.மு.க.வினர் இடையே கழகத்தினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்தை வைக்கக்கோரி மாநகராட்சி 23-வது வார்டு கழக கவுன்சிலர் புனிதா சம்பத், மேயர் மகாலட்சுமியிடம் மனு அளித்திருந்தார்,
இதற்கு முன் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்தை மாமன்ற அரங்கத்தில் வைக்க வேண்டுமென கழக கவுன்சிலர்கள் சிந்தன், சண்முகநாதன், பிரேம்குமார், வேலரசு, புனிதா சம்பத், சாந்தி அகிலா சம்பத், ஜோதிலட்சுமி சிவாஜி உள்ளிட்டோர் கூட்டத்தொடர் ஆரம்பத்திலேயே மேயரிடம் முறையிட்டனர்.
கூட்டம் முடிந்தவுடன் படத்தை வைத்துக்கொள்ளலாம் என மேயர் கூறினார். ஆனால் கூட்டம் முழுமையாக முடிவதற்கு முன்னரே உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மேயர் பாதியிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு அவர் அறைக்கு சென்று விட்டதால், கழக உறுப்பினர்கள் அம்மா அவர்களின் திருவுருவப் படத்தை மாமன்றத்தில் மாலை அணிவித்து வைத்தனர்.
ஆனால் மாநகராட்சி மாமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்தை வைக்கக்கூடாது என மாநகராட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லாத தி.மு.க வட்ட செயலாளர்களை வைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரச்சினையில் ஈடுபட்டனர்.
இதனால் கழகத்தினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் அடுத்த கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படம் திரும்பவும் மாமன்றத்தில் வைக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்,