சிறப்பு செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்-கழக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

சென்னை

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் கழக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரை தேர்ந்தெடுக்க ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதன்படி வேட்மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் ( மே 31) கடைசி நாள் ஆகும்.

இதன்படி கழகத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் மனு தாக்கல் செய்தார். இது தவிர 5 சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சட்டப்பேரவை செயலக செயலாளர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் கழகத்தின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்களும் அடங்கும்.

வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை ஜூன் 3-ம் தேதி வரை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

இதன்படி, தமிழகத்தில் 6 பதவிக்கு, கட்சிகள் சார்பில் 6 பேர் மட்டுமே போட்டியிடும் நிலை இருக்கும். எனவே 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.