இசையமைப்பாளர் இளையராஜா பாரத ரத்னா உட்பட பல உயரிய விருதுகளை பெற வேண்டும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்

சென்னை
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாரத ரத்னா உள்பட பல உயரிய விருதுகளை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
இன்று தனது 80-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரும், தன்னுடைய இசையால் தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவருமான இசைஞானி இளையராஜாவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமெனவும், இசைத்துறையில் மேலும் பல சாதனைகள் புரிந்து, இந்திய திருநாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ உட்பட பல உயரிய விருதுகளை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதேபோல் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இல்லங்களில் நிறைந்திருக்கும் இசை வானின் அதிசய நட்சத்திரம். இசை உலகின் ராஜா; இசைஞானி இளையராஜாவின் 80-வது பிறந்ததினத்தில் அவருடைய இசை போல் நூறாண்டு கடந்து வாழ்வாங்கு வாழ வணங்கி மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.