தமிழகம்

இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான பணிகள் தீவிரம்

சென்னை

இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன,

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்ட உத்தரவு வருமாறு:

தமிழக சட்டசபை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளைப் பரப்பிட திருக்கோயில் எனும் பெயரில் ரூ8.77 கோடி மதிப்பீட்டில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது, இதன் தொடர்ச்சியாக திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களில் நடைபெறும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு தேவையான எடிட்டிங் மற்றும் வர்ணனைகளை இணைக்கும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன.

இந்த கடிதத்தின் மூலம் தமிழக திருக்கோவில் நிகழ்வுகளை ஆவணப்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை திருக்கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் செய்திட அறிவுறுத்தப்பட்டு சில திருக்கோவில்களின் வீடியோ ஆவணப்படங்கள் ஆணையர் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆவணப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு சில திருக்கோயில்களின் ஆவணப்படங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன. தற்போது சிறப்பான வீடியோ ஒளிப்பதிவுகளை அறநிலையத்துறை வழிகாட்டுதலை பின்பற்றி தயார் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

திருக்கோவில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிப்பதிவு செய்திட அதிகளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வோர் திருக்கோவில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் 4 கே ரிசல்யூஷன் கேமரா மூலம் வீடியோகிராபர்கள் பதிவு செய்து ஆணையர் அலுவலகத்தில் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த உத்தரவில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.