மதுரை

விளையாட்டு வீரர்களுக்கு வேண்டிய உதவியை அரசு செய்து கொடுக்கும் – வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை:-

விளையாட்டு வீரர்களுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்து கொடுக்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு தொகுதி சார்பில் மாபெரும் விளையாட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கருப்பாயூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரசு செய்திருந்தார். ஆர்.செந்தில்குமார், கார்த்திகேயன், பாண்டி, மச்சக்காளை, முருகேசன், செல்லத்துரை, பாக்யலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போட்டிகளை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரா.முத்துக்குமார், தனம் போஸ், மேலூர் ஒன்றிய கழக செயலாளர் பொன்னுச்சாமி, நகர செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,072, இரண்டாம் பரிசாக ரூ.45,072, நான்காம் பரிசாக ரூ.40,072, நாங்கம் பரிசாக ரூ.10,072 மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

பரிசு வழங்கி மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் திறமைகளை உலகறிய செய்ய அம்மாவின் வழியில் முதலமைச்சர் விளையாட்டுத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் 16,586 மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை ஏற்படுத்தி இதன்மூலம் கிராமந்தோறும் விளையாட்டுத்திடல் அமைக்கவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் ரூ.76.23 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார்.

மேலும் சர்வதேச தரத்தில் நமது விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் விளையாட்டுத்துறைக்கு மட்டும் ரூ.218 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். ஆகவே அம்மா பிறந்த நாளை முன்னிட்டு இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று நீங்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும், அதன்பின் சர்வதேச அளவிலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழகத்திற்கு சிறப்பு பெற்றுத் தரவேண்டும். உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் நிச்சயம் உங்களுக்கு உருவாக்கித் தருவார்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.