தற்போதைய செய்திகள்

நடப்பாண்டில் 85 ஆயிரம் மகளிருக்கு நாட்டுக்கோழிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

தூத்துக்குடி
நடப்பாண்டில் 85 ஆயிரம் மகளிருக்கு நாட்டுக்கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் துறையூர் ஊராட்சி பகுதி மற்றும் தெற்கு வண்டானம் ஊராட்சி பகுதியில் தலா ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் திறப்பு விழா மற்றும் திலி தனி துறையூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கால்நடை மருந்தகத்தினை திறந்து வைத்து 9 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் மதிப்பில் சிறு வணிகக் கடன் உதவிக்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011 முதல் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வந்தார். அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் ஒவ்வொரு துறையின் வாயிலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியில் 10 லட்சம் மகளிர்களுக்கு 40 லட்சம் வெள்ளாடுகள் வழங்கப்பட்டது. 1 லட்சம் மகளிர்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செயல்படுத்தும் சிறப்பு திட்டமான நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தில் 50,000 மகளிர்களுக்கு நாட்டு கோழிகள் வழங்கப்பட்டது. இந்த வருடம் 85,000 மகளிர்களுக்கு நாட்டு கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கால்நடைகளுக்கு என நடமாடும் மருத்துவ அவசர ஊர்தி 1962 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் அனைத்து உதவிகளும் கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் திறந்து வைக்கப்படும் கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு இலவசமாக ஊசி மற்றும் மருந்துகள் போடப்படுகிறது. இதனை கால்நடை வளர்ப்போர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது கால்நடைகளுக்கு எந்தவொரு நோயின்றி வளர்த்து தங்களது வாழ்வாதாரம் உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், திலி தனி துறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வேளாண்மை கடன் சங்க தலைவர் துறையூர் கணேஷ்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், தங்க மாரியம்மாள், ஊராட்சி தலைவர்கள் சண்முகலட்சுமி, கனகராஜ்., கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் மணிகண்டன், பாஸ்கரன், சத்யநாராணணன், உதவி இயக்குநர்கள் சங்கர நாராயணன், அந்தோணிராஜ், செல்வகுமார், முன்னாள் ஆவின் தலைவர் ஆறுமுக நயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.