தற்போதைய செய்திகள்

சேலம் மாவட்டத்தில் காற்றின் தன்மையை கண்காணிக்க நடமாடும் ஆய்வகம் – சட்டப்பேரவையில் கே.சி.கருப்பணன் அறிவிப்பு

சென்னை

மாவட்ட வாரியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், சேலம் மாவட்டத்தில் காற்றின் தன்மையை கண்காணிக்க நடமாடும் ஆய்வகம் அமைக்கப்படும் என்றும் பேரவையில் அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார்.

தமிழக சட்டபேரவையில்  சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

மாநிலத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒரு செயல் திட்டத்தினை உருவாக்குவதற்கு ஏதுவாக, தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளிலும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தை புகழ் பெற்ற அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமாக தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2020-2021 முதல் 2022-2023 வரையிலான காலப்பகுதியில் 15 மாநகராட்சிகளுக்கான திட்டங்கள், ஆண்டுக்கு ஐந்து மாநகராட்சிகள், என்ற விகிதத்தில், மாநகராட்சிக்கு ஒன்றுக்கு ரூ. 8 லட்சம் செலவில் 15 மாநகராட்சிகக்கு மொத்தம் ரூ.120 லட்சம் செலவில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

அறிஞர் அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள பருவநிலை ஸ்டுடியோவுடன் இணைந்து, வேளாண் மண்டலம் வாரியாக, காலநிலை மீள்வளர்ச்சி திட்டத்தை ரூ.332.82 லட்சம் மதிப்பீட்டில் 37 மாவட்டங்களில் தயாரிக்கப்படும். இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். நடப்பு 2020-21-ம் ஆண்டில் ரூ.110.94 லட்சம் செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள சின்ன ஏரியினை 2020-21-ம் ஆண்டில் சூழல் 2020-21-ம் ஆண்டில் ரூ.336.00 லட்சத்தில் ஏரிக் கரையை வலுப்படுத்தியும், தோட்டங்கள் போன்றவை அமைத்தும் சின்ன ஏரி புனரமைக்கப்படும்.

2013-14-ம் ஆண்டு முதல் 2019-20 வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளை கொண்டு நாட்டுப்புறப்பாடல், தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு மற்றும் பாரம்பரிய நடனம் ஆகியவைகளுடன் வாகனங்கள் மூலமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டம், மாவட்டத்திற்கு ரூ.1.20 லட்சம் செலவில், மாவட்டம் ஒன்றுக்கு 20 இடங்கள் வீதம் 37 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.44.40 லட்சம் செலவில், தேர்வு செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளை கொண்டு மேற்கொள்ளப்படும்.பள்ளி மாணாக்கர்களிடையே சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பரப்பும் விதமாக, தேசிய பசுமைப்படை மற்றும் சூழல் மன்ற மாணவர்களுக்கு வினாடி-வினா, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி ஆகிய மூன்று இனங்களில், எட்டாம் வகுப்பிற்கு கீழ் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு மேல் என இரண்டு பிரிவுகளாக சூழல் போட்டிகள் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் நடத்தப்படும். இந்த நடவடிக்கைகள் மாவட்டத்திற்கு ரூ.1.50 லட்சம் வீதம் 37 மாவட்டங்களில் ரூ.55.50 இலட்சம் செலவில் நடைமுறைப்படுத்தப்படும்.

தேசிய பசுமைப்படை, சூழல் மன்ற மாணாக்கர்கள் மற்றும் பொது மக்களுக்கு, பல்லுயிர் பாதுகாப்பு, மாசினை தடுத்தல் போன்றவை குறித்த கருத்தரங்கங்கள், கருத்துப்பட்டறைகள் 2020-21-ம் ஆண்டில் ரூ.100 லட்சம் செலவில் நடத்தப்படும்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இரண்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்களை வேலூர் மற்றும் வாணியம்பாடியில் நிறுவியுள்ளது. இப்பகுதியில் 426 உறுப்பினர்களை கொண்ட தோல் தொழிற்சாலைகளுக்காக 8 பூஜ்ஜிய கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புடன் கூடிய பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தும்,

80 தோல் தொழிற்சாலைகள் தனித்தனியே பூஜ்ஜிய கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தும் மற்றும் தோல் தொழிற்சாலைகளுடன் தொடர்புடைய 80 இன்னபிற தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

இத்தொழிற்சாலைகள் தங்களது கழிவுநீரை பாலாறு நதி படுகையில் சுத்திகரிக்காமல், ரகசியமாக வெளியேற்றுவதாகவும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகள் நிலம் மற்றும் நீர் நிலைகளில் கொட்டப்படுவதாகவும், பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது புகார் மனுக்கள் வாரியத்தால் பெறப்படுகின்றன.

திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணிப்பு செய்து பாலாற்றின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில் ஒரு பறக்கும் படை 2020-2021-ம் நிதியாண்டில் ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும். இந்த பறக்கும் படை வேலூரை தலைமையிடமாக கொண்டு ஒரு சுற்றுச்சூழல் பொறியாளர், ஒரு உதவிப் பொறியாளரை கொண்டு இயங்கும். இதற்கான பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.

ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள் மற்றும்,ஐந்து பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பசுமை விருதுகள் 2020-2021-ம் நிதியாண்டு முதல் வாரிய நிதியிலிருந்து வழங்கப்படும்.சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்பு நலச்சங்கங்களுக்கு வாரியம் ஆண்டுதோறும் பசுமை விருது வழங்கி ஊக்குவித்து வருகின்றது. இதன்படி வாரியத்தில் சிறப்பாக களப்பணி ஆற்றும் ஒரு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகம் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் பசுமை விருது 2020-2021 ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு மேலாண்மை மற்றும் இதர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை,அறிந்து கொள்ளும் வகையில் 2018-2019 ஆம் நிதியாண்டில் 200 பள்ளிகளுக்கும் மற்றும் 2019-2020-ம் நிதியாண்டில் 300 பள்ளிகளுக்கும் ஆக மொத்தம் 500 பள்ளிகளுக்கு திரவ படிக காட்சிபடுத்தும் கருவிகள் வழங்கப்பட்டது. 2020-2021 -ம் நிதியாண்டில் 300 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1.5 கோடி செலவில் திரவ படிக காட்சிபடுத்தும் கருவிகள் வழங்கப்படும்.சேலம் மாவட்டத்தில் சுற்றுப்புற காற்றின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஒரு நடமாடும் தொடர் காற்று தர கண்காணிக்கும் ஆய்வகம் 2020-2021-ம் நிதியாண்டில் ரூ.2.5 கோடி செலவில் நிறுவப்படும்.

சமீப காலங்களில் நீர், நிலம் மற்றும் காற்று மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலக அளவில் புதிய தூய்மை தொழில்நுட்பங்கள் செயல் வடிவம் பெற்றுள்ளன. அதே போன்று மாசு காரணிகள் அளவிடுதல், சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை கொண்டு எதிர்கால போக்கினை முன்னறிவித்தல் போன்றவற்றில் புதிய மென்பொருட்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இத்தகைய புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு செயலாக்கம் செய்யும் வகையில் வாரியத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வெளிநாடுகளில் நடத்தப்படும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவும், அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அமைப்புகளில் பயிற்சி மேற்கொள்ளவும் அனுப்பி வைக்கப்படுவர். இப்பயிற்சி 2020-2021 நிதியாண்டிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

ஆண்டுதோறும் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மொத்தம் ஐந்து பேருக்கு 2020-2021, 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் 15 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், 2020-2021-ம் நிதியாண்டில் பணியில் அமர்த்தப்படும் உதவிப் பொறியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு சுற்றுச்சூழல் சட்டங்கள், தொழிற்சாலைகள் ஆய்வு செய்தல், மாதிரிகள் சேகரிப்பு செய்தல் மற்றும் வாரிய செயல்பாடுகள் குறித்து உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகள் மொத்தம் ரூ.2 கோடி செலவில் அளிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார்.