தற்போதைய செய்திகள்

முதலமைச்சரை சந்தித்த பின் சிறுபான்மையின மக்கள் தெளிவு பெற்று விட்டனர் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி

சென்னை

முதலமைச்சரை சந்தித்த பின்னர் சிறுபான்மையின மக்கள் தெளிவு பெற்று விட்டனர் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்தார்.

தமிழக சட்டபேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய மக்கள் தொகை பதிவேடு குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினார்.

இதற்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலளித்து பேசியதாவது:-

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் கணக்கெடுக்கப்படுவார்கள். இதில் 3 புதிய கேள்விகள் புதிதாக கேட்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். இன்னமும் அதற்கு பதில் வரவில்லை. தமிழ்நாட்டில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு குறித்து அறிவிக்கப்படவில்லை. கணக்கெடுப்பு நடத்தப்படவும் இல்லை. வண்ணாரப் பேட்டை இஸ்லாமிய சகோதரர்கள் முதலமைச்சரை சந்திக்க விரும்பினார்கள்.

சிறுபான்மை மக்களை பாதுகாத்து வரும் இயக்கம் அண்ணா தி.மு.க. இனியும் பாதுகாக்கும் என்று தங்களை சந்தித்த இஸ்லாமிய சகோதரர்களிடம் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விளக்கம் அளித்து உறுதி கூறியுள்ளனர். மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்த சொல்கிறது. அதனை நடத்தி கொடுப்பது நமது பணி.

2003-ம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது என்.பி.ஆர். உருவாக்கப்பட்டது. 2010-ல் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அதனை அமுல்படுத்தினார்கள். கணக்கெடுப்பு நடந்தது. எனவே இப்போது தான் இது கொண்டு வரப்பட்டது போல நினைக்கிறார்கள்.

2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகள் படி தான் அன்று கணக்கெடுப்பு நடந்தது. சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. முதலமைச்சரை சந்தித்த பின் அவர்கள் தெளிவு பெற்றிருக்கிறார்கள். எனவே இல்லாத அச்சத்தை இருப்பதாக சொல்ல வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

மீண்டும் மு.க. ஸ்டாலின் எழுந்து விளக்கம் கேட்டார். என்.பி.ஆர்- ல் இப்போது புதிதாக விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அன்றைக்கு ஆவணங்களை காட்டச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. தாய் தந்தையர் பிறந்த தேதியை கேட்கவில்லை. தாய்மொழி பற்றி கேட்கவில்லை. ஆனால் இன்று பல்வேறு கேள்விகளை கேட்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.

2010-ல் என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடந்ததை எதிர்க்கட்சி தலைவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். 2010ம் ஆண்டு எடுக்கப்பட்டது போல இப்போது எடுத்தால் ஆட்சேபணை இல்லை என்று கூறியிருக்கிறார். ஆவணங்கள் கேட்கப்படுவதாக அவர் கூறினார். அது தவறான தகவல். ஆவணங்களை சரிபார்க்க தேவை இல்லை.

மத்திய அரசு எல்லா மதத்தை சேர்ந்தவர்களின் விவரத்தை சேகரிக்கிறது. என்.பி.ஆரில் கூடுதலாக சில கேள்விகளை மத்திய அரசு கேட்டிருக்கிறது. தாய், தந்தையர் பிறந்த இடம், தேதி, ஆதார் எண், கைபேசி எண், ஓட்டுனர் லைசென்ஸ் விவரங்கள் கேட்டிருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

நம் மாநிலத்தில் என்.பி.ஆர். புதுப்பிக்கும் பணி இன்னும் நடைபெறவில்லை. சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையே இல்லை.நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி இருக்கிறார்கள். மாநில அரசு அதற்கு கட்டுப்பட்டது. எனவே இதனை எதிர்ப்பது மக்களை ஏமாற்றுவது, வஞ்சிப்பதாகும்.இப்போது புதிதாக சில கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். இதற்கு விளக்கம் கேட்பதில் என்ன தவறு? உச்ச நீதிமன்றத்தில் இதுசம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நாம் எப்படி தீர்மானம் கொண்டு வரமுடியும்.

இவ்வாறு பேசினார்.