பாதிக்கப்பட்ட விவசாயிகளை இதுவரை வேளாண் அமைச்சர் சந்திக்காதது ஏன்?தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் கேள்வி

கடலூர்
கடலூரில் சூறாவளி காற்றால் 3 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இதுவரை வேளாண் அமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? என்று தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் தெற்கு மாவட்டம் கடலூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் உட்கட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களின் செயல்வீரர்கள் கூட்டம் கண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மாநில அம்மா பேரவை துணை செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவர் என்.முத்துலிங்கம், மாவட்ட பொருளாளர் கே.தேவநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் ரா.ராஜசேகர், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் எஸ்.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.டி.வினோத் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசியதாவது:-
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வுக்கு மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லை. கடந்த வாரம் கடலூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் வீசிய சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன.
குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தான் தமிழக வேளாண்துறை அமைச்சராக உள்ளார். இதுவரை அவர் இங்கே வந்து பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக கழக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் இப்போது மின்தடை அதிகமாக உள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் அணில்கள் மின் வயர்களை கடிப்பதால் மின்தடை ஏற்படுகிறது என்ற உண்மைக்கு புறம்பான விளக்கத்தை அளிக்கிறார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார்கள். ஆனால் கருணாநிதி தனது குடும்பத்தினருக்காகவே வாழ்ந்ததால் இன்று அவரது குடும்பத்தினர் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
புரட்சித்தலைவர் தான் சிறுவயதில் பசியோடு இருந்த காரணத்தால் தான் சிறு வயது குழந்தைகள் பசியில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார்.
பின் ஆட்சிக்கு வந்த அம்மா அவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் என்று சிறந்த திட்டங்களை வழங்கினார். அவர் வழியில் எடப்பாடியார் குடிமராமத்து திட்டத்தை உருவாக்கி விவசாயிகளின் மனதில் என்றென்றும் நிற்கும் முதல்வராக உள்ளார்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசினார்.